புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டத்தின் பின்னணியில் எவ்வித அரசியல் நோக்கமும் இல்லை – அமைச்சர் குமார ஜயகொடி

9 0

மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டத்தின் பின்னணியில் எவ்வித அரசியல் நோக்கமும் இல்லை. மக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதே உண்மையில் எமது நோக்கமாகும். எனவே இதற்கு அங்குள்ள மதத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் உட்பட அனைவரின் ஆதரவையும் எதிர்பார்கப்பதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.

மன்னாரில் வியாழக்கிழமை (15) காற்றாலை மின் உற்பத்தி திட்டமொன்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திட்டம், நாட்டை புதுப்பிக்கத்தக்க வலுசக்தியால் பலப்படுத்துவதோடு, பிரதேச மக்களுக்குத் தேவையான வசதிகள் மற்றும் நன்மைகளை வழங்கும் திட்டமாகும். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் என்ற வகையில், மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் பின்னணியில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. மக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதே உண்மையில் எமது நோக்கமாகும். மன்னாரை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில், அந்தப் பகுதியில் உள்ள மதத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் உட்பட அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றோம்.

மன்னார் பகுதி நாட்டிலேயே அதிக காற்று மின் உற்பத்தி திறன் கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். நாட்டின் அபிவிருத்திக்கு அந்த உயர் இயலுமையைப் பயன்படுத்த அரசாங்கத்தின் வலுவான தேவையை நிரூபிக்கும் நாளாக இன்றைய நாளை குறிப்பிடலாம். இலங்கையில் காற்றாலை மின் உற்பத்தி வரலாற்றில் மிகக் குறைந்த விலையில் ஒரு அலகு மின்சாரத்தை கொள்வனவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்ட முதல் திட்டமும் இதுவாகும்.
அதற்கமைய 0.0465 டொலர் விலையில் இந்த கொள்வனவு செய்யப்படுகிறது. மன்னார் பகுதியில் வேறு பல திட்டங்களும் நடைபெற்று வருகின்றன. கடந்த 2025 ஆம் ஆண்டு, புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் ஊடாக 1848 மெகாவோல்ட் மின்சக்தியைப் பெறுவது எமது இலக்காக இருந்தது. இருப்பினும், அந்த இலக்கைத் தாண்டி 2,695 மெகாவோல்ட் திறனைச் சேர்க்க எம்மால் முடிந்துள்ளது. மேலும், 2026 ஆம் ஆண்டிற்கான இலக்கு 2078 மெகாவோல்ட் ஆகும்.

தற்போது, இது 3,089.5 மெகாவோட் பெறுவதற்காக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. மேலும், 2027, 2028 மற்றும் 2029 ஆம் ஆண்டுகளுக்கான இலக்குகள் முறையே 2563, 3253 மற்றும் 3943 மெகாவோட்களாக இருந்தபோதிலும், நாம் ஏற்கனவே அந்த இலக்குகளை தாண்டி முறையே 3,822.5 மெகாவோல்ட், 4332.5 மெகாவோல்ட் மற்றும் 4,634.5 மெகாவோட் மின்சாரத்திற்கான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதன்படி, 2025 – 2029 ஆம் ஆண்டுக்கான திட்டமிடப்பட்ட மொத்த திறனான 9,759 மெகாவோல்ட் மின் உற்பத்திக்கு பதிலாக 12,789.5 மெகாவோல்ட் மின்சாரத்திற்கான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட முடிந்தது. புதுப்பிக்கத்தக்க வலுசக்தி இலக்குகளை அடைய மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதை இது எடுத்துக்காட்டுகிறது. இப்பிரதேசத்தின் காற்று மின் உற்பத்தித் திறன் மற்றும் இப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பிரதேசத்திற்கு உரித்தான புவியியல் ரீதியான காரணிகள் குறித்து நாம் ஆராய்ந்தோம். குறிப்பாக, இப்பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளில் அரசாங்கத்தின் தலையீடு மிக அவசியமானது என்பதே இங்குள்ள மக்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, மன்னார் பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக நாம் விசேட செயற்பாட்டுக் குழுவொன்றை நியமித்துள்ளோம். அதன் ஊடாக இப்பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்குத் தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, இங்குள்ள புவியியல் ரீதியான அமைவிடம் காரணமாக நீர் வழிந்தோடாமையினால் ஏற்படும் பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது அதற்கான நில அளவீட்டுப் பணிகள் இடம்பெற்று வருவதுடன், அதன் முன்னேற்றம் குறித்து தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

இந்தத் திட்டங்களை வகுத்து, மக்களுக்குத் தேவையான வசதிகளை விரைவாகச் செய்துகொடுக்க மாவட்டச் செயலாளரின் தலையீட்டுடன், அரசியல் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. நாம் இந்த நடவடிக்கைகளை மின்சார உற்பத்தியுடன் மாத்திரம் மட்டுப்படுத்தவில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் என்ற வகையில், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் நிவாரணங்களை வழங்கி அதன் நன்மைகளை மக்களுக்கு ஈட்டிக்கொடுக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். நாம் எக்காலத்திலும் மக்களை மறந்துவிடவில்லை. அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க அரசாங்கம் என்ற ரீதியில் கடமைப்பட்டுள்ளோம்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கட்சிபேதமின்றி இதற்கு ஆதரவளிப்பார்கள் என நாம் எதிர்பார்க்கிறோம். இவை எமது அரசியல் நோக்கங்களுக்காகச் செய்யப்படும் விடயங்கள் அல்ல. எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து மக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்கி இப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்வோம் என்றார்.