சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட இலங்கையின் கடற்றொழில் துறையின் பேண்தகுதன்மையைப் பாதுகாக்கும் நோக்கில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் (DFAR) ஒரு முக்கிய கொள்கை ரீதியான தீர்மானத்தை அறிவித்துள்ளது.
அதற்கமைய, 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி முதல், வெளிநாட்டு கடல் எல்லைகளைச் சட்டவிரோதமாக மீறும் அல்லது படகுகள் கண்காணிப்பு அமைப்பை (VMS) வேண்டுமென்றே செயலிழக்கச் செய்யும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும்.
எந்தவொரு படகோட்டி மற்றும் முழுப் பணியாளர்களுக்கும், சட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் விதிக்கப்படக்கூடிய ஆறு மாத காலக் கடுமையான மீன்பிடித் தடையை நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்க்கமான நடவடிக்கையானது, சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளதுடன், இதன் மூலம் நாட்டின் கடல் வளங்கள், தேசிய பாதுகாப்பு மற்றும் மில்லியன் கணக்கான டொலர் பெறுமதியான கடல் உணவு ஏற்றுமதிச் சந்தை ஆகியவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களைக் குறைப்பதை நோக்காகக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், சுசந்த கஹவத்த, இந்த நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்தினார்.
இலங்கையானது, உயர் தரத்திலான மீன்களுக்காக உலகளாவிய நற்பெயரைப் பெற்றுள்ளது. இந்த தொழிற்துறை எமது கரையோர சமூகங்களின் வாழ்வாதாரத்தின் உயிர்நாடியாகவும், தேசிய உணவுப் பாதுகாப்பின் முக்கிய தூணாகவும் விளங்குகின்றது என அவர் குறிப்பிட்டார்.
எனினும், ஒரு மிகச் சிறிய குழுவினரின் சட்டவிரோத நடவடிக்கைகள் காரணமாக, ஏற்றுமதித் தடை போன்ற பாரதூரமான சர்வதேசப் பின்விளைவுகளை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது.
நாம் இதற்கு முன்னர் ஒருமுறை இந்த அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளோம், மீண்டும் அதுபோன்ற ஒரு நிலைமை ஏற்படுவதற்கு நாம் இடமளிக்க முடியாது.
உலகின் மீன் வளம், எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்கப்பட வேண்டிய, சர்வதேச சட்டங்களின் கீழ் நிர்வகிக்கப்படும் ஒரு வரையறுக்கப்பட்ட வளம் என்பதைச் சுட்டிக்காட்டிய பணிப்பாளர் நாயகம், இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் இரண்டு பிரதான மீறல்களையும் அடையாளம் காட்டினார்.
ஏனைய நாடுகளின் பிரத்தியேகப் பொருளாதார வலயங்களுக்குள் (EEZs) அத்துமீறிப் பிரவேசித்தல். தேசிய பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் அயல் நாடுகளால் கூட சுட்டிக்காட்டப்பட்டுள்ளவாறு, சட்டவிரோத செயல்களை மறைப்பதற்காக VMS அமைப்புகளை வேண்டுமென்றே செயலிழக்கச் செய்தல்.
எமது மீனவர்களில் மிகப்பெரும்பான்மையினர் சட்டபூர்வமாகவும் பொறுப்புடனும் செயற்பட்டாலும், ஒரு சிறு குழுவினரின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் அனைவரையுமே பாதிக்கின்றன. என கஹவத்த விளக்கினார்.
மீனவர் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடனும் விரிவாகக் கலந்துரையாடியதன் பின்னர், நாம் இந்தத் தடையை ஒரு தண்டனையாக அன்றி, அவசியமான ஒரு தடுப்பு நடவடிக்கையாகவே நடைமுறைப்படுத்துகின்றோம்.
எமது இலக்கு, அனைத்து மீனவர்களையும் சட்டபூர்வமான நடைமுறைகளை நோக்கி வழிநடத்தி, இந்த அத்தியாவசியக் தொழிற்துறையின் நீண்டகால சுபீட்சத்தைப் பாதுகாப்பதாகும். என தெரிவித்தார்.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமானது, அனைத்துப் படகோட்டிகளையும் பணியாளர்களையும், தமது கடல் பயணம் முழுவதும் VMS அமைப்புகளைச் செயற்படுத்தி வைத்திருக்குமாறும், கடல் எல்லைகளுக்குக் கண்டிப்பாக மதிப்பளிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றது.
இந்த புதிய கடுமையான கொள்கை, இலங்கையின் கடல் வளங்களைப் பாதுகாக்கவும், சர்வதேச உடன்படிக்கைகளை உறுதிப்படுத்தவும், பேண்தகு கடற்றொழில் துறையை நம்பியிருக்கும் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

