இடைநிலை ஆசிரியர்கள் 996 பேர் மீதான வழக்கை திரும்பப் பெற திருமாவளவன் வலியுறுத்தல்

28 0

“சமவேலை – சம ஊதியம்” என்னும் கோரிக்கையை வலியுறுத்தி போராடிய இடைநிலை ஆசிரியர்கள் 996 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சமவேலை – சம ஊதியம்” என்னும் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஒரு வார காலமாகப் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இன்று கைது செய்யப்பட்ட 996 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிவரும் ஆசிரியப் பெருமக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டுமென்பதுடன், அவர்களின் கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுகிறேன்.

இதற்கென நியமிக்கப்பட்ட ஆணையம் வழங்கியுள்ள அறிக்கையின் படி, ஆறாவது ஊதிய குழவில் நேர்ந்த ஊதிய முரண்களைக் களைந்து சம ஊதியம் வழங்கிட அரசு ஆவன செய்யவேண்டுகிறேன். ஜனநாயகப் பூர்வமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென விசிக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.