தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வானது கடந்த 27.11.2025 அன்று டென்மார்க்கில் கேர்னிங் நகரில் பெருந்திரளான மக்களின் எழுச்சியுடன் நடைபெற்றது.
“எமக்கு ஒரு நாடு வேண்டும், எமது மக்களுக்கும் விடுதலை வேண்டும், எமது இனம் சுதந்திரமாக வாழ வேண்டும், என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் வீழ்கிறார்கள். எனவே எமது மாவீரர்கள் ஒவ்வொருவரின் சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும், வீர சுதந்திரப் பிரகடனமாகவே சம்பவிக்கின்றது” என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையை மனதில் நிறுத்தி மாவீரர் நாள் நிகழ்வு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகி தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தமிழீழத் தேசியத்தலைவரின் 2008ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரை ஒளிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்துலகத் தொடர்பகத்தின் 2025 மாவீரர் நாளுக்கான உத்தியோகபூர்வ கொள்கைப்பகுப்பு அறிக்கை
ஒலிபரப்பப்பட்டது.
தாயக நேரம் மாலை 6.05 மணிக்கு மணி ஒலி எழுப்பப்பட்டு அகவணக்கம் இடம்பெற்றதைத் தொடர்ந்து, 2000 ஆம் ஆண்டு ஆனையிறவு வெற்றிச் சமரில் வீரச்சாவடைந்த 2 ஆம். லெப். சாந்தமலர் அவர்களின் சகோதரி முதன்மைச்சுடர் ஏற்றியவுடன், துயிலுமில்லப்பாடல் இசைக்கப்பட்டது.
தொடந்து முதல் மாவீரன் லெப்.சங்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு நாட்டுப்பற்றாளர் விமலேஸ்வரன் அவர்களின் துணைவியார் மலர் வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து தேசநிலா இசைக்கலைஞர்கள் மாவீரர் கானம் இசைக்க மாவீரர் குடும்பத்தினர், மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினர் மற்றும் பொதுமக்களாலும் மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
மாவீரர் நாள் நிகழ்வில் டென்மார்க் நாடாளுமன்ற மற்றும் நகரசபை உறுப்பினர்களின் பேச்சுக்கள், டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் அனைத்துலகத் தமிழ் இளையோர் அமைப்பின் துணைப் பொறுப்பாளர் ஆகியோரின் சிறப்புரைகளுடன், மாலதி தமிழ்க் கலைக்கூட வளக்குழு ஆசிரியர்களின் “கல்லறைகள் பேசுகின்றன” கவிதா நிகழ்வுடன்,
டென்மார்க் நடனக்கல்லூரி ஆசிரியர்களின், மாணவர்கள் மற்றும் மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்களின் எழுச்சி நடனங்களுடன், டென்மார்க் கலைப்பண்பாட்டுக் கழகம் தயாரித்து வழங்கிய “எங்கள் வீரத்தின் மகள்”
(தமிழீழத்தின் முதற் பெண் மாவீரர் 2லெப். மாலதியின் வீர வரலாறு) நாடகமும் இடம் பெற்றது.
01.01.1999 முதல் 31.12.2004 வரை தாயக மண்மீட்புப் போரிலே
வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்களை உள்ளடக்கி,
அனைத்துலகத் தொடர்பகத்தின் வெளியீட்டுப் பிரிவினரால்
உருவாக்கப்பட்ட
“தமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம் 3” வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து அறிவாடல் ஒருங்கிணைப்புக் குழுவால் இணையவழியில் நடாத்தப்பட்ட அனைத்துலக மாணவர்களுக்கான அறிவாடல் போட்டி 2025இல், டென்மார்க்கில் இருந்து கலந்து கொண்டு, வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினால் இம் மாதம் 5ஆம் திகதி நடைபெற்ற மாவீரர் நினைவு சுமந்து ஓவியப்போட்டி 2025 இல் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
தேசியத்தலைவரின் சொல்லுக்கு செயல் வடிவம் கொடுத்து, இளையோர்கள் முன்னின்று மாவீரர் நாள் நிகழ்வுகளை மிகவும் உணர்புபூர்வமாக நடாத்தியிருந்தார்கள்.
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வானது நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலைத் தொடர்ந்து தேசியக்கொடி கையேந்தப்பட்டு,
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற எமது தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.




























































