கடந்த 27.11.2025,வியாழக்கிழமை அன்று டோட்முண்ட் நகரில் அமைந்துள்ள Westfalen Halle மண்டபத்தில்,பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் மிகவும் உணர்வெழுச்சியோடு மாவீரர்நாள் நடைபெற்றது. அனைத்துலகக் கல்விமேம்பாட்டுப் பேரவையின் துணை இணைப்பாளர் திரு.கிருஸ்ணா அவர்கள் 12:57 மணிக்கு பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார். தொடர்ந்து தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 2008 ஆம் ஆண்டு மாவீரர்நாள் உரை திரையில் காண்பிக்கப்பட்டபின்னர்,அனைத்துலகச் செயலகத்தினால் வெளியிடப்பட்ட, தமிழீழவிடுதலைப்புலிகளின் மாவீரர்நாள் அறிக்கை ஒலிபரப்பப்பட்டது.
துயிலுமில்லம் அமைக்கப்பட்ட பகுதியில் மாவீரர் குடும்ப உறவுகள் உணர்வோடு நிறைந்திருக்க 13:32 மணிக்கு மணியோசை ஒலிக்க அகவணக்கம் செய்யப்பட்டது.
சரியாக 13:37 மணிக்கு துயிலுமில்லப்பாடல் இதயங்களை ஈரமாக்க முதன்மை ஈகச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. முதன்மை ஈகச்சுடரினை 12.04.1996 அன்று கொழும்புத்துறைமுகத்தில் வைத்து கடற்படை கலங்கள் மற்றும் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட, யாழ்ப்பாணம் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட நாகேந்திரன் தங்கராசா எனும் இயற்பெயரை உடைய மாவீரர் மேஜர் தென்னமுதன் பரன் அவர்களின் சகோதரி திருமதி. கெளரி இராயன் அவர்கள் ஏற்றிவைக்க, தொடர்ந்து மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முதலில் சுடர், மலர் வணக்கம் செய்தபின்னர், அனைத்து மக்களும் மாவீரர்களுக்கு சுடர், மலர் வணக்கம் செய்தார்கள்.
மாவீரர் நினைவு சுமந்து எழுச்சிபூர்வமாக வடிமைக்கப்பட்ட அரங்கில் இசைவணக்கத்தோடு விடுதலை நிகழ்வுகள் தொடங்கியது. இசைவணக்கத்தினைத் தொடர்ந்து “மாவீரர் பெட்டகம் ” தொகுதி மூன்றினைத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனிக்கிளையின் தாயகநலன் பொறுப்பாளர் திரு.இரா. இராயன் அவர்கள் வெளியிட்டு வைக்க யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பின் டோட்முண்ட் நகரப் பொறுப்பாளர் செல்வி சுவேத்தா சிவகரன், தமிழ்க் கல்விக்கழகத்தின் பொறுப்பாளர் திரு.செல்லையா லோகானந்தம், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் துணைப் பொறுப்பாளர் செல்வி.தமிழினி பத்மநாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
மாவீரர் நினைவு சுமந்து கவிதை மற்றும் பேச்சு தமிழாய மாணவர்களினால் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.
ஆற்றுகை நிறைவு செய்த யேர்மன் கலைபண்பாட்டுக்கழக இளைய ஆசிரியர்களது விடுதலை நடனத்தினைத் தொடர்ந்து “மறைந்திடா மாவீரம்” இறுவெட்டு அதன்இசைத்தொகுப்பாளர்திரு.அமுதன் அவர்கள்வெளியிட்டுவைக்க தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் இராட்டிங்கன்நகரச்செயற்பாட்டாளர்திரு.அப்பாத்துரை திருச்செல்வம் அவர்களும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மத்தியமாநிலம் ஒன்றின் துணைப்பொறுப்பாளர் திரு.சந்திரா லதகுமார் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.அதன்பின்னர் “கார்த்திகைதீபம் ” மாவீரர் ஆண்டிதழ் வெளியிட்டு வைக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் பெண்களின் வகிபாகம் குறித்தும் தொடர்ந்தும் பெளத்த சிங்கள இனவாத அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பில் தமிழீழப் பெண்கள் எதிர்கொண்டுவரும் துயரங்கள் சார்ந்தும் யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் உரை நிகழ்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனிக் கிளையின் அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. ந.திருநிலவன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
பேர்லின் நகரக் கலைஞர்கள் வழங்கிய தமிழீழ மக்களின் வலி தாங்கிய குறுநாடகம் அனைவரையும் கலங்க வைத்தது.
அதனைத்தொடர்ந்து யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரது யேர்மன் மொழியிலான உரையும், அறிவாடற் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும், யேர்மன் தழுவியரீதியில் யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினால் நடாத்தப்பட்ட தமிழாலயங்களுக்கிடையேயான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொண்ட தமிழாலங்களுக்கு வெற்றிக்கேடயங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
தமிழீழ மண்ணின் விடுதலைக்கவி அகரப்பாவலன் அவர்களது உயிர்வரிகளில் எழுதப்பட்ட “மறைந்திடா மாவீரம் ” நாட்டியத்தொகுப்பு மண்டபம் நிறைந்த மக்களை எழுச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது. நிறைவாக தமிழ் இளையோர் அமைப்பினரது உறுதியுரையுடன்,”நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்”என்ற பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் மண்டபம் அதிர மக்கள் ஒலியெழுப்பி தமிழீழத் தேசியமாவீரர்நாள் 2025
மிகவும் உணர்வெழுச்சியோடு நிறைவு பெற்றது.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-யேர்மனி, மாவீரர் பணிமனை.









































































































































































































































































































































































































































































