நுவரெலியாவில் வெள்ளம் ; போக்குவரத்தும் விவசாயமும் பாதிப்பு!

24 0

சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் பல தாழ்நில பிரதேசங்களில் இன்று புதன்கிழமை (26) வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன், பிரதான வீதிகளில் உள்ள பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.

பிரதான வீதிகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நுவரெலியா- உடப்புசல்லாவ  பிரதான வீதியில் கந்தபளை கோர்ட்லோட்ஜ் சந்தியின் புதிய வீதி முழுவதுமாக நீரில் மூழ்கியதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது எனவும் இதனால் சிறிய ரக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என கந்தபளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறிப்பாக நுவரெலியா கந்தபளை, ஹைபொரஸ்ட் , ராகலை, நானுஓயா போன்ற  பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக விவசாயம் செய்யும் தாழ் நிலங்களில்மழைநீர் தேங்கியுள்ளதனால் அறுவடைக்கு தயாரான மரக்கறிகளும் அழிவடைந்துள்ளது.

மேலும் நுவரெலியா கந்தபளை பிரதேசத்தில் பொது மக்களின் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் சென்றமையால் அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.

இதேவேளை நுவரெலியாவில் பிரதான வீதிகளில் முறிந்து வீழ்ந்த மரங்களை நுவரெலியா மாநகரசபையின் தீயணைப்பு படையினர் வெட்டி அகற்றிவருகின்றனர்.