விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் அமைச்சர் (பேராசிரியர்) கிரிஷாந்த அபேசேன பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – இந்தோனேஷிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
நட்புறவுச் சங்கத்தை மீளஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் செவ்வாய்க்கிழமை (25) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்தோனேஷியக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர், தேவி குஸ்டினா டோபிங் (H.E. Dewi Gustina Tobing) கௌரவ அதிதியாக இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் அத்தம்பாவா நட்புறவுச் சங்கத்தின் செயலாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி நட்புறவுச் சங்கத்தின் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
பகிரப்பட்ட சமயரீதியான தொடர்புகள், கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் மக்களுக்கு இடையேயான ஈடுபாடுகளின் அடிப்படையில் இலங்கைக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையேயுள்ள நீண்டகால நட்புறவை இரு தரப்பினரும் இங்கு வலியுறுத்தினர்.
சுற்றுலா, விவசாயம், எரிசக்தித் துறை மற்றும் டிஜிட்டல் நிலைமாற்றம் ஆகியவற்றில் மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்புக்கான குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை அவர்கள் மேலும் எடுத்துரைத்தனர்.
அத்துடன், மீளஸ்தாபிக்கப்பட்ட பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான பயனுள்ள தளமாகச் செயற்படும் என்று இரு தரப்பினரும் நம்பிக்கை வெளியிட்டனர்.
இக்கூட்டத்திற்கு முன்னர், இந்தோனேஷியத் தூதுவர் சபாநாயகரை மரியாதையின் நிமித்தம் சந்தித்தார். இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கைக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து முன்னெடுத்தல் மற்றும் பாராளுமன்ற மட்டத்திலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டன.







