சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணையை முடிக்க மேலும் 3 மாத அவகாசம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

26 0

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை முடிக்க விசாரணை நீதிமன்றத்துக்கு மேலும் 3 மாத அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ், இவரது மகன் பெனிக்கிஸ். இவர்கள் செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த 2020 ஜூன் 19-ல் கரோனா ஊரடங்கு நேரக் கட்டுப்பாடு தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி ஜெயராஜ், பெனிக்ஸ் இருவரையும் போலீஸார் விசாரணைக்காக சாத்தான்குளம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து தந்தை, மகன் இருவரையும் போலீஸார் கடுமையாக தாக்கியுள்ளனர்.

பலத்த காயமடைந்த நிலையில் முதலில் பெனிக்ஸ், பின்னர் ஜெயராஜ் ஆகியோர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய தந்தை, மகன் கொலை வழக்கை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு சிபிஐ விசாரணைக்கு மாற்றியது.

இதையடுத்து சிபிஐ போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர்கள் முருகன், காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில் முத்து உள்ளிட்ட 9 பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணையில் உள்ளது. கைதான 9 பேரும் ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடியானதால் கைதான நாளிலிருந்து சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சம்பவத்தின் போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்களான பியூலா, ரேவதி உட்பட 50-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் முடிக்க உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது.

இந்நிலையில் விசாரணையை முடிக்க மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டு விசாரணை நீதிமன்றம் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி கே.முரளிசங்கர், வழக்கு விசாரணையை முடிக்க இறுதியாக 3 மாத அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த காலக்கெடுவிற்குள் விசாரணையை முடிக்கவும் உத்தரவிட்டார்.