இந்தியாவில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மேற்கொள்ளும் யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்துள்ளோம். கடந்த காலங்களில் எத்தனை அரசாங்கங்கள் இருந்தன. எவரும் இதனை கருத்திற் கொள்ளவில்லை. மத விவகாரங்களில் பாரபட்சம் காட்டப்படுவதாக குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம் என புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
உரிமைகளை வென்றெடுக்க போராட்டம் செய்ய வேண்டிய அவசியமில்லை. மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சகல பிரச்சினைகளுக்கும் நாங்கள் தீர்வளித்துள்ளோம் என்று குறிப்பிடவில்லை. கட்டம் கட்டமாகவே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வளிப்போம்.
அனைத்தையும் எதிர்க்கும் மனநிலையில் உள்ள எதிர்க்கட்சியினர் வரவு – செலவுத் திட்டத்தையும் எதிர்ப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல, இந்து மத விவகாரத்துக்கு நிதி ஒதுக்கியுள்ளமை குறைவாக உள்ளது என்று எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள்.இது முற்றிலும் தவறானது.
தேசிய தைப்பொங்கல் உற்சவத்தை யாழ்ப்பாணத்தில் கொண்டாடினோம். இந்தியாவில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மேற்கொள்ளும் யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்துள்ளோம். கடந்த காலங்களில் எத்தனை அரசாங்கங்கள் இருந்தன.எவரும் இதனை கருத்திற் கொள்ளவில்லை.
கோயில் உட்பட மத தலங்கள் புனரமைப்புக்கு பல மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையர் தினத்துக்கு 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே மதங்களுக்கு வேறுப்படுத்தப்பட்ட வகையில் சலுகைகள் வழங்கப்படுகின்றன என்று குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம் என்றார்.

