வரவு செலவு திட்டம் மூலம் பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தமைக்கு ஜனாதிபதிக்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அதேநேரம் 25 நாட்கள் தொழிலுக்கு சென்றால்தான் இந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என்றால், அதற்கு நாங்கள் எதிர்ப்பு. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்க்கட்சி உறுப்பினர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (13) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டின் வரவு செலவு திட்டம் நாட்டில் இருக்கும் அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கும் ஒன்றாகும். அந்தவகையில் வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதியின் அறிவிப்பு பெருந்தோட் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அரசாங்கம் ஒன்றின் வரவு செலவு திட்டம் ஒன்றின் மூலம் பெருந்தோட்ட மக்களுக்கு 200 ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட்டிருப்பது வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும் என்றே நினைக்கிறேன். அதனால் ஜனாதிபதிக்கு எமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் அரசாங்கத்தில் இருக்கும் அனைவரும் அக்கறையும் அனுதாபமும் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. இந்த அனுதாபத்தை நிறைவேற்ற வேண்டும். அதனால் இந்த சம்பள அதிகரிப்பை நிறைவேற்றுமாறு ஜனாபதிக்கு சொல்லுங்கள். பெருந்தோட்ட மக்களுக்கு சம்பள அதிகரிப்பாக கம்பனிகளிடமிருந்து 200 ரூபாவும் அரசாங்கத்திடமிருந்து 200 ரூபாவும் வழங்குவதாக ஜனாதிபதி வாக்குறு அளித்திருக்கிறார்.
அரசாங்கம் வழங்க தீர்மானித்த 200ரூபாவுக்கு நாங்கள் எமது பூரண ஆதவை வழங்குவோம். எமது மக்களுக்கு ஏதாவது கிடைப்பதற்கு யாராவது எதிர்ப்பு என்றால், அதற்கு நாங்கள் இணங்கமாட்டோம். சிலவேளை நாங்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவும் இடமிருக்கிறது. அதுதொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை.
அதேநேரம் 25 நாட்கள் தொழிலுக்கு சென்றால்தான் இந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என்றால், அதற்கு நாங்கள் எதிர்ப்பு. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.கம்பனிகள் 25நாட்கள் வேலை வழங்குவதாக தெரிவித்து, 20 நாட்கள் மாத்திரம் வேலை வழங்கிவிட்டு, இந்த 200 ரூபா வழங்குவதை நிறுத்த முடியாது. அவர்கள் ஒரு நாள் வேலைக்கு வந்தாலும் அவர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். இதற்கு அரசாங்கம் உத்தரவாதம் வழங்க வேண்டும்.
மேலும் இந்த நாட்டில் சமூக நீதி மற்றும் நலன்கள் இன,மத, ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.அதேபோன்று 2009 யுத்தம் நிறைவுக்கு கொண்டுவந்தபோது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் சிங்கள மக்களால் கடவுளாக பார்க்கப்பட்டார். அந்த காலத்தில் அவர் தமிழ் மக்களுக்கு தீர்வாக கொடுக்க வேண்டும் என்று எதையாவது கொண்டுவந்திருந்தால், நிச்சயமாக சிங்கள மக்கள் அதனை ஏற்றுக்காெண்டிருப்பார்கள்.ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை. அடுத்த தேர்தலை பற்றி சிந்தித்தார்களே தவிர தமிழ் மக்களுக்கு தீர்வொன்றை வழங்க வேண்டும் என சிந்திக்கவில்லை.
தற்போது 159 பாராளுமன்ற உறுப்பினர்களைக்கொண்ட, மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கிடைத்திருக்கிறது. மலையக மக்களின் அனுதாபம் பற்றி பேசுவதுபோல், வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் தீர்வுதொடர்பாகவும் பேசுங்கள். அதற்கு ஒரு தீர்வை கொடுங்கள். அதற்கான ஒரு அடையாளமாக மாகாணசபை தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யுங்கள். தமிழ் மக்களுக்கு அதிகார பரவலாக்கத்தை கொடுத்து, அந்த மக்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள், மாகாணசபை என்பது தமிழ் மக்களுக்கு மாத்திரம் உரியது அல்ல. சிங்கள மக்களுக்கும் உரித்தானதாகும். பாராளுமன்றத்தினால் செய்ய முடியாத சில வேலைகளை மாகாணசபையால் மேற்கொள்ள முடியும் என்றார்.

