அனுதாபம் அல்ல சுய கௌரவத்துடன் அனைத்து மக்களும் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்காக சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களும் சுபிட்சமாக வாழக்கூடிய நிலை உருவாக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (13) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு மட்டும் போதாது என்பதை நாம் உணர்கின்றோம். அவர்களுக்கான வீட்டு வசதி மட்டுமின்றி அவர்களது வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நிலையான அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு அனைத்து திட்டங்களும் மேற்கொள்ளப்படும்.
அனுதாபம் அல்ல சுய கௌரவத்துடன் அனைத்து மக்களும் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நோக்கமாகும். அந்த வகையில் நாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களும் சுபிட்சமாக வாழக்கூடிய நிலை உருவாக்கப்படும்.
அரச துறை ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் அத்தியாவசியமான வெற்றிடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை மூன்று கட்டங்களாக அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதன் ஒரு பகுதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டம் எதிர்வரும் வருடத்தில் வழங்கப்படவுள்ளது.
அரச துறையை டிஜிட்டல் மயப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் மூலம் மக்களுக்கு உண்மையான சேவை வழங்கக்கூடிய கவர்ச்சிகரமான அரச துறை கட்டியெழுப்பப்படும்.
போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளது. பல்வேறு விடயங்கள் அடங்கிய செயற்திட்டம் அதற்காக முன்னெடுக்கப்படுகிறது. வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற எமது கொள்கை உறுதியாக நிலைநாட்டப்படும். அதன் இலக்குகளை அடைவதற்கு முதலாவது வருடத்தில் அதற்கான பலமான அடித்தளத்தை இட்டுள்ளோம்.
அந்த பலமான அடித்தளத்தின் மூலம் நாம் பெற்றுக் கொண்ட நன்மைகளை குறிப்பிட வேண்டும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த வருடத்தின் முதல் அரையாண்டில் காணப்பட்ட 4.6 வீதத்திலிருந்து தற்போது 4.8 வீதமாக அதிகரித்துள்ளது.
தொழில் வாய்ப்பு இல்லாத நிலை முதல் காலாண்டில் காணப்பட்ட 4.5 வீதத்திலிருந்து தற்போது 3.8 வீதமாக குறைவடைந்துள்ளது.
எமது ஏற்றுமதி வருமானம் 8.5 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து தற்போது 9.1 பில்லியனாக அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு மூலம் ஈட்டப்படுகின்ற அன்னிய செலாவணி 4.8 பில்லியனிலிருந்து 5.8 வீதமாக அதிகரித்துள்ளது. சுற்றுலாத்துறை வருமானமும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.
எனவே குறுகிய கால நன்மைக்கு பதிலாக நீண்ட கால நன்மை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இறைமை, சுபிட்சமான நாட்டைக் கட்டி யெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

