அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்துரையாடல்

20 0

வைத்தியசாலையில் உருவாகியுள்ள பிரச்சினைகள் மற்றும் வைத்தியர்களின் தொழில் பாதுகாப்பு தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள் வியாழக்கிழமை (13) எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்துறையாடியிருந்தனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை (14) நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்திய சங்க பிரதிநிதிகளுடன் கலந்துறையாடி வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைத் தொடர்பில் தீர்க்கமான தீர்மானம் அறிவிக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

வைத்தியசாலையில் உருவாகியுள்ள பிரச்சினைகள் மற்றும் வைத்தியர்களின் தொழில் பாதுகாப்பு தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள் நேற்று வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துறையாடியிருந்தனர்.  இந்த கலந்துரையாடலின் பின்னர் கொழும்பில் வியாழக்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வைத்தியர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

அரச வைத்தியசாலை கட்டமைப்பில் உருவாகியுள்ள நெருக்கடிகளை தீர்ப்பதற்கு இதுவரை உரிய தரப்பினரால் எவ்வித தீர்வும் வழங்கப்படவில்லை. இதனால் வைத்தியசாலை கட்டமைப்பு எந்நேரத்திலும் சீர்குலைய வாய்ப்புள்ளது.  அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் இந்த பிரச்சினைகளுக்கான தீர்வு முன்மொழியப்பட்டுள்ள போதும்.  அரசாங்கத்தினர் அதை கருத்திற் கொள்ளாது தன்னிச்சையாக செயற்படுகின்றனர். இலவச சுகாதார துறையை நம்பியுள்ள பொதுமக்களே இதனால்  அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வைத்தியசாலை கட்டமைப்பில் வைத்தியர்கள் தொழில் புரிவதற்கு ஏற்ற சூழல்  இல்லாமல் போயுள்ளது. நோயாளிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் திருப்திகரமாக இல்லை. அடிப்படை உட்கட்டமைப்பு வசதி, சுகாதார வசதி மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் ஆகியவற்றில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன.  கடந்த  இரண்டு, மூன்று வருடங்களில் 2500 க்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களில் 800 அதிகளவானோர் விசேட வைத்திய நிபுணர்களாவர். 2022 ஆம் ஆண்டு இந்நாட்டில் 2700 விசேட வைத்திய நிபுணர்கள் இருந்தனர். எனினும் தற்போது 2 ஆயிரத்துக்கும் குறைவான வைத்திய நிபுணர்களே உள்ளனர்.

வைத்தியர்களை நாட்டில் தக்க வைத்துக் கொள்வதற்கான முறையான திட்டம்  ஒழுங்கமைக்கப்பட்ட வில்லை. அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டத்திலாவது எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற எமது எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை.  இந்நிலையில் 17 ஆம் திகதி திங்கட்கிழமை  முதல் ஒரு சில கடமைகளில் இருந்து விலகி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.  இந்நிலையில் வெள்ளிக்கிழமை (14) நாடளாவிய ரீதியில் உள்ள  அரச வைத்திய சங்க பிரதிநிதிகளுடன்  கலந்துரையாடி வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைத் தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படும் என்றார்.