பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பை எதிர்க்கும் முயற்சிகளை கண்டித்த நஜித் இந்திக

32 0

பெருந்தோட்ட மக்களுக்கு இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் கடன்பட்டுள்ளார்கள். நாட்டுக்கு அதிகளான அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் மலையக மக்கள் தமது உழைப்புக்கேற்ற ஊதியத்தை இதுவரை காலமும் பெறவில்லை.பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பில் 200 ரூபா அரசாங்கம் வழங்குவது தவறு என்ற நிலைப்பாட்டை எதிர்தரப்பினர் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடு .சம்பள அதிகரிப்பை நெருக்கடிக்குள்ளாக்குவதை எதிரக்கட்சியினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று   தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்   நஜித் இந்திக தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (12)  நடைபெற்ற  2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான   நான்காம்  நாள் விவாதத்தில் உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் பல விடயங்களை குறிப்பிடுகிறார்கள், குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கிறார்கள். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போதும் இவர்கள் இவ்வாறான குற்றச்சாட்டுக்களையே முன்வைத்தார்கள்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சிப் பெறும் வரை மக்கள்  விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.அவ்வாறு நாங்கள் குறிப்பிடவில்லை.ஆட்சியாளர்கள் செய்த தவறின் பிரதிபலனை  மக்கள் அனுபவிக்க வேண்டிய தேவை கிடையாது.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் தான் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்  அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு 6 கொள்கைத் திட்டங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை தற்போது எமக்கு குறிப்பிடும் தரப்பினர் தான் 78 ஆண்டுகாலமாக  நாட்டை ஆட்சி செய்தார்கள்.இவர்களின் பொருளாதார முகாமைத்துவத்தினால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது, ஆகவே நாங்கள் ரணில் சென்ற பாதையில் செல்லவில்லை. கட்சியின் ஒழுக்கத்தை கூட உறுதிப்படுத்த முடியாதவர்கள் எவ்வாறு நாட்டின் நிதி ஒழுக்கத்தை உறுதிப்படுத்தி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கெப் ரக வாகனங்கள் கொள்வனவு செய்ய 12,500மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக  எதிர்க்கட்சியினர் அரசியல் பிரசாரம் செய்தார்கள். இந்த 12500 மில்லியன் ரூபா அரச நிறுவனங்களுக்கு வாகனங்கள் மற்றும் பொறிகள் இறக்குமதி செய்வதற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது என்று  தெளிவுப்படுத்தியதன் பின்னர்  தற்போது பிறிதொரு விடயத்தை பற்றிக் கொண்டார்கள்.

பெருந்தோட்ட மக்களுக்கு  200 ரூபா நாளாந்த சம்பளம் அதிகரிப்பு என்பது வரலாற்று ரீதியான சாதனை.இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த நாட்டில் 200 ஆண்டுகாலமாக மலையக மக்கள் பல துயரங்களுக்கு மத்தியில் வாழ்கிறார்கள். பெருந்தோட்ட மக்களுக்கான சம்பள அதிகரிப்பையிட்டு எதிர்க்கட்சிகள் உட்பட ஒட்டுமொத்த மக்களும் மகிழ்ச்சியடைய வேண்டும்.

பெருந்தோட்ட மக்களுக்கு இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் கடன்பட்டுள்ளார்கள். நாட்டுக்கு அதிகளான அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் மலையக மக்கள் தமது உழைப்புக்கேற்ற ஊதியத்தை இதுவரை காலமும் பெறவில்லை.   பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார்.அதன் முதற்கட்டமாகவே சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பில் 200 ரூபா அரசாங்கம் வழங்குவது தவறு என்ற நிலைப்பாட்டை எதிர்தரப்பினர் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இது மிகவும் மோசமானது.எவ்வாறு இப்படி குறிப்பிடுகிறார்கள். பெருந்தோட்ட மக்களை விசேட தரப்பினராக அடையாளப்படுத்தி அவர்களுக்கு நிவாரமளிக்க வேண்டும்.

விவசாயிகள், கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் போது எவரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பின்  போது மாத்திரம் ஏதாவதொன்றை குறிப்பிட்டு அதை நெருக்கடிக்குள்ளாக்குவார்கள்.  இவ்வாறான செயற்பாட்டை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

பெருந்தோட்ட மக்கள்  கடந்த காலங்களில்  ஐக்கிய தேசியக் கட்சிக்கே ஆதரவளித்தார்கள்.இம்முறைதான் எமக்கு ஆதரவளித்துள்ளார்கள். ஆகவே  இந்த சம்பள அதிகரிப்பை  நெருக்கடிக்குள்ளாக்காதீர்கள் அது முற்றிலும் தவறானது என்றார்.