2028க்கு பிறகு கடனை திருப்பி செலுத்துவதற்கு எவ்வித திட்டமும் இல்லை

28 0

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களை செயற்படுத்துவதாக குறிப்பிட்டுக்கொண்டு அரசாங்கம் நாட்டை பொருளாதார ரீதியில் மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்குகிறது. 2028ஆம் ஆண்டுக்கு பின்னர் கடனை திருப்பி செலுத்துவதற்கு எவ்வித திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை. ஆகவே அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்றே குறிப்பிட வேண்டும் என சர்வஜன சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம்  நாள் விவாதத்தில் உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் பேரண்ட பொருளாதாரம் நாட்டு மக்களுக்கு  பயனுடையதாக அமையும் என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். சமூக கட்டமைப்பில்  ஏழ்மை 3 சதவீதமாகவும், தொழிலின்மை  2 சதவீதத்தாலும் உயர்வடைந்துள்ளது. ஆனால் நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடையவில்லை. சம்பளமும் அதிகரிக்கப்படவில்லை.

வரி வருமானத்தின் ஊடாக ஒரு ரில்லியன் ரூபாவை திரட்டியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். இளைஞர்களின்  வாகனம் மற்றும் வீடு உட்பட அழகான வாழ்க்கையின் கனவு தான் வரியாக திரட்டப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகள் மீதான வெற் வரி நீக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால் ஆட்சிக்கு  வந்ததன் பின்னர்  அந்த சர்வதேச நாணய நிதியத்துக்கு அச்சமடைந்து  வாக்குறுதிகளை மறந்துவிட்டார்.

சர்வதேச நாணய நிதியம் விதிக்கும் சகல நிபந்தனைகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. மேற்குலக நாடுகள் மத்தியில் அரசாங்கம் தலைகுனிந்து செயற்படுகிறது. இதனால் இலங்கை தனது தேசிய கௌரவத்தை இழந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களை செயற்படுத்துவதாக குறிப்பிட்டுக்  கொண்டு அரசாங்கம் நாட்டை  பொருளாதார  ரீதியில் மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்குகிறது. 2028ஆம் ஆண்டுக்கு பின்னர் கடனை திருப்பி செலுத்துவதற்கு எவ்வித திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை. ஆகவே அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்றே குறிப்பிட வேண்டும் என்றார்.