2026 – 2030 காலப்பகுதிக்கான விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்தவும், நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள ஒவ்வொரு விதாதா நிலையத்திற்கும் ஒரு விஞ்ஞான பட்டதாரி வீதம் சேவையில் ஈடுபடுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
2025.11.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 11 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மூலம் உருவாகின்ற புதிய தொழிநுட்ப அறிவால் கிராமிய சமூகங்களை வலுவூட்டும் நோக்கில், ‘கிராமத்திற்கு தொழிநுட்பம்’ எனும் எண்ணக்கருவின் கீழ் விதாதா வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது நாடு முழுவதும் 315 விதாதா நிலையங்கள் இயங்குகின்றன.
2021 – 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறைவாகக் கவனம் செலுத்தப்பட்டிருந்த ‘கிராமத்திற்கு தொழிநுட்பம்’ எனும் எண்ணக்கரு சக்திவாய்ந்ததாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சரால் விதாதா வேலைத்திட்டத்திற்கான 2026-2030 ஆண்டுக்கான ஐந்தாண்டு மூலோபாயத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய தொழில்முயற்சி அதிகாரசபை மற்றும் இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை போன்ற நிறுவனங்களுடன் ஒத்துழைப்புடன் விதாதா வளநிலை நுண் சேவைகள் மற்றும் உதவி நிலையங்களாக மாற்றுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2026 – 2030 காலப்பகுதிக்கான விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்தவும், நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 315 விதாதா வளநிலையங்களுக்கு ஒவ்வொரு விதாதா நிலையத்திற்கும் ஒரு விஞ்ஞான பட்டதாரி வீதம் சேவையில் ஈடுபடுத்துவதற்கும், விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

