அக்குரணை
யில் ஏற்படும் வெள்ளப்பெருக்குக்கு தீர்வுகாண, அங்கு அமைக்கப்படும் சட்டவிராேத கட்டிடங்களுக்கு எதிராக ஒட்டுமொத்த அக்குரணை மக்களும் அணிதிறள வேண்டும் என ஆளும் கட்சி உறுப்பினர் ரியாஸ் பாரூக் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான இரண்டாம்நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப் படுத்திக் கொண்டு முன்வைக்கப்பட்டிருக்கும் வரவு செலவுத் திட்டமாக இம்முறை வரவு செலவுத் திட்டத்தை குறிப்பிட முடியும்.
கடந்த முறை நாம் வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கும் போது இங்கு பலர் எமக்கு உபதேசங்களை வழங்கினர். இம்முறையும் அவ்வாறுதான். உபதேசங்களை வழங்குகிறார்கள்.
கடந்த முறை அவ்வாறு உபதேசம் செய்தவர்கள் பொருளாதாரம் தொடர்பிலும் வாகன இறக்குமதி தொடர்பிலும் பல விடயங்களை முன்வைத்து, அவ்வாறு செயற்பட்டால் பொருளாதாரம் வீழ்ச்சியடையும். டொலர் தட்டுப்பாடு ஏற்படும் என்றெல்லாம் தெரிவித்தனர்.
அவ்வாறானவர்களே இம்முறை வரவு செலவுத் திட்டம் சிறந்தது என தெரிவிக்கின்றனர். அவ்வாறு உபதேசம் செய்தவர்களே எழுபது வருடங்கள் இந்த நாட்டை ஆட்சி செய்துள்ளனர். அதனால் நாம் இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கும் நிதிக்கு ஏற்ப வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறே நாம் அவர்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.
பிரதேச செயலாளர்கள் உட்பட அரசாங்க அதிகாரிகள் எம்முடன் தற்போது பெரும் ஒத்துழைப்புடன் செயல்படுகின்றனர். அவர்கள் இப்போது ஞாயிற்றுக்கிழமையும் போயா தினங்களிலும் கூட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் பழைய கலாசாரத்துக்கு ஏற்ப செயல்படுபவர்கள் இன்றும் உள்ளனர். குறிப்பாக அக்குரணைப் பகுதி வெள்ளம் பிரச்சினை தொடர்பில் இந்த பாராளுமன்றத்திலும் பல தடவைகள் பேசப்பட்டுள்ளன. அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
கடந்த தேர்தல் காலங்களில் அதனை வைத்து பலர் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவுடன் அந்தப் பக்கம் திரும்பிப் பார்ப்பதும் இல்லை. அவ்வாறான ஒருவர் தாம் தேசிய தலைவர் என்றும் அப்பகுதிக்கு தம்மால் வர நேரம் இல்லை என்றும் தெரிவித்ததை.இங்கு குறிப்பிட வேண்டும்.
அக்குரணையில் ஏற்படும் வெள்ளப்பெருக்குக்கு அங்கு அமைக்கப்படும் சட்டவிராேத கட்டிடங்களே காரணமாகும். அதனால் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண, அங்கு அமைக்கப்படும் சட்டவிராேத கட்டிடங்களுக்கு எதிராக ஒட்டுமொத்த அக்குரணை மக்களும் அணிதிறள வேண்டும்.
அதேநேரம் அக்குரணையில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்கவும் அக்குரணை நகரத்தை அபிவிருத்தி செய்யவும் நாங்கள் தற்போது வரைபொன்றை தயாரித்து வருகிறோம்.அந்த வேலைத்திட்டத்துக்கு சுமார் 2ஆயிரம் கோடி ரூபா செலவாகும் என மதிப்பிட்டிருக்கிறோம் என்றார்.

