சிறுவர்களுக்கு எதிரான உடலியல் ரீதியான தண்டனைகளை முடிவுக்குக்கொண்டுவரல்

67 0

சிறுவர்களுக்கு எதிரான உடலியல் ரீதியான தண்டனைகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான திருத்தச் சட்டமூலமானது எந்தவொரு கட்டமைப்பிலும் நிகழக்கூடிய உடலியல் ரீதியான தண்டனை வழங்கலை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற கூட்டிணைந்த கோரிக்கையின் ஓரங்கமே ஆகும். இம்மறுசீரமைப்பின் நோக்கத்தையும், முக்கியத்துவத்தையும் பொதுமக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அண்மையகாலங்களில் உடலியல் ரீதியான தண்டனைகளுடன் தொடர்புடைய சிறுவர்களுக்கு எதிரான உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரித்தவருகின்றன. இவ்வாறான சம்பவங்கள் உடலியல் ரீதியான காயங்களை மாத்திரமன்றி, நீண்டகாலம் நிலைத்திருக்கக்கூடிய உளவியல் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. சில சந்தர்ப்பங்களில் இந்த உளவியல் தாக்கம் தற்கொலைகள் இடம்பெறுவதற்கும் காரணமாக அமைந்திருக்கின்றது.

இத்தகைய தீவிர கரிசனைகளை அடுத்து தண்டனைச் சட்டக்கோவையின் 19 ஆவது பிரிவைத் திருத்துவதற்கான திருத்தச்சட்டமூலம் கடந்த ஜுலை மாதம் 4 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டது. 18 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு எதிராக வழங்கப்படும் உடலியல் சார்ந்த மற்றும் சாராத மிகமோசமான, பாதக விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தண்டனைகளைத் தடுப்பதே இச்சட்டமூலத்தின் நோக்கமாகும்.

இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் சிறுவர் பாதுகாப்புக்கு அவசியமான வலுவான அடித்தளத்தை ஏற்கனவே வழங்கியுள்ளது. சிறுவர் மற்றும் இளம் நபர்கள் கட்டளைச் சட்டமானது சிறுவர்களுக்கான கரிசனை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேவேளை, தண்டனைச் சட்டக்கோவையானது சிறுவர்களுக்கு எதிரான மோசமான நடவடிக்கைகளைக் குற்றமாக்கியுள்ளது. அதேபோன்று அரசியலமைப்பின் 11 ஆவது பிரிவானது எந்தவொரு நபரும் சித்திரவதை அல்லது மிகமோசமான, மனிதத்தன்மையற்ற தண்டனைக்கு உள்ளாகக்கூடாது என்பதை உத்தரவாதப்படுத்தியுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் மேற்படி மறுசீரமைப்பு (திருத்தம்) என்பது எந்தவொரு கட்டமைப்பிலும் நிகழக்கூடிய உடலியல் ரீதியான தண்டனை வழங்கலை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற கூட்டிணைந்த கோரிக்கையின் ஓரங்கமே ஆகும் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். ஒழுக்கம் என்பது மிகமுக்கியமாகும். இருப்பினும் அது சிறுவர்கள் மத்தியில் அச்சத்தையும், வன்முறைகளையும் விதைப்பதை விடுத்து அவர்களின் கௌவரம் மற்றும் தன்னம்பிக்கையைக் கட்டியெழுப்பக்கூடியவாறான நேர்மறையானதும், மரியாதைக்குரியதுமான நடவடிக்கைகள் மூலம் கட்டமைக்கப்படவேண்டும்.

எனவே இந்த மறசீரமைப்புக்களின் நோக்கத்தையும், முக்கியத்துவத்தையும் பொதுமக்கள் புரிந்துகொள்ளவேண்டியது மிக அவசியமாகும். சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சட்டங்கள் குறித்த உரிய தகவல்களின் அடிப்படையில் மரியாதைக்குரிய முறையில் வெளிப்படையாகக் கலந்துரையாடப்படவேண்டும். மாறாக அவை சிறுவர்களின் பாதுகாப்பை வலுவிழக்கச்செய்வதற்கும், குழப்பங்களை ஏற்படுத்துவதற்கும் ஏதுவான எதிர்மறை பிரசாரமாக மாற்றப்படக்கூடாது என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.