பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் ; 25ஆம் திகதிக்குள் இறுதி தீர்வு – கிட்ணன் செல்வராஜா

57 0

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு எதிர்வரும் 25ஆம் திகதிக்குள் இறுதி தீர்வு வழங்கப்படும். அந்தத் தீர்வை உள்ளடக்கியே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நவம்பர் 7ஆம் திகதி வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும். வெள்ளிக்கிழமை (17) கூடவுள்ள சம்பள நிர்ணய சபையிலும் இதற்கான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உறுதிபூண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான கிட்ணன் செல்வராஜா தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்த பேச்சுவார்த்தைக்காக சம்பள நிர்ணயசபையானது கொழும்பிலுள்ள தொழில் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (17) மதியம் 1 மணியளவில் கூடவுள்ளது. இந்நிலையில் ஆளுங்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தொழிற்சங்க தலைவர் என்ற ரீதியிலேயே கிட்ணன் செல்வராஜா இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் கடந்த திங்களன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கம்பனிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தார். புதனன்று இடம்பெற்ற பல்துறைசார் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. அந்த சந்திப்பின் போதும் பெருந்தோட்ட தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் என்ற ரீதியில் அவர்களது சம்பளம் உள்ளிட்ட ஏனைய முக்கிய பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் யோசனையொன்றை முன்வைத்திருக்கின்றோம்.

பெருந்தோட்டத் தொழிலளார்களின் சம்பள விவகாரத்தில் அரசாங்கம் நேரடியாக தலையிடும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். அந்த வகையில் ஜனாதிபதியிடம் எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் மூலம் பெருந்தோட்ட மக்களுக்கு நிச்சயம் நன்மை கிடைக்கும். ஆரம்பத்தில் கூட்டு ஒப்பந்தத்தின் மூலமாக இரண்டு ஆண்டுகளுக்கொருமுறை சம்பளம் அதிகரிக்கப்பட்டது. பின்னர் சம்பள நிர்ணய சபையின் ஊடாக இந்த விடயம் அணுகப்பட்ட போது, மேலும் ஆண்டு அதிகரிக்கப்பட்டு சம்பள அதிகரிப்பு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை என தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இது நியாயமற்றதாகும்.

எனவே தான் இம்முறை சம்பள விவகாரத்தில் அரசாங்கம் நேரடியாக தலையிட்டுள்ளது. சம்பள நிர்ணய சபையின் ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று நம்புகின்றோம். காரணம் தொழில் திணைக்களம் என்ற அரச நிறுவனத்தின் கீழ் இந்த சம்பள நிர்ணய சபை கூடுகிறது. அந்த வகையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்க்கை செலவுக்கு பொறுத்தமான வகையில் சம்பள அதிகரிப்பைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அந்த பொறுப்பை ஜனாதிபதி தலைமையில் நிச்சயம் நாம் நிறைவேற்றுவோம்.

பெருந்தோட்ட கம்பனிகள் பல தசாப்தங்களாகவே சம்பள அதிகரிப்பு குறித்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தால், தமக்கு உற்பத்தி செலவு அதிகம் என்றும் உற்பத்தி போதாது என்று தான் கூறி வருகின்றன. இன்றும் அதனையே கூறிக் கொண்டிருக்கின்றன. பெருந்தோட்ட உற்பத்திகள் வீழ்ச்சியடைந்துள்ளமைக்கு கம்பனிகளின் முறையான பராமரிப்பின்மையே காரணமாகும். முறையான பராமரிப்பின்மையால் 18 சதவீதமாக பெருந்தோட்ட விளை நிலங்கள் கைவிடப்பட்டுள்ளன. வரண்ட காலநிலையின் போது 12 சதவீத உற்பத்திலும், மழைக் காலநிலையின் போது 25 சதவீத உற்பத்தியும் மாத்திரமே பெறப்படுகிறது. இவ்வாறான நிலைமைக்கு கம்பனிகளே பொறுப்பு கூற வேண்டும்.

விளை நிலங்கள் மாத்திரமின்றி பெருந்தோட்டங்களிலுள்ள பெரும்பாலான சிறுவர் பராமரிப்பு நிலையங்களும் கம்பனிகளால் கைவிடப்பட்டுள்ளன. எனவே அவற்றை அரசாங்கத்தின் பொறுப்பில் எடுத்து, கட்டடங்களை மீள புனரமைத்து ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்கான யோசனையை 2026 வரவு – செலவு திட்டத்துக்காக முன்வைத்திருக்கின்றோம்.

அதற்கமைய பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளை மாத்திரமின்றி பெருந்தோட்டங்களிலுள்ள ஏனைய பிள்ளைகளையும் அரசாங்கத்தின் பொறுப்பிலெடுத்து பராமரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இவ்வாறு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு மாத்திரமின்றி ஏனைய பிரச்சினைகளுக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் தீர்வினை வழங்கும் என்றார்.