பொலிஸ் திணைக்களம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகிறது.ஆட்சியாளர்களை திருப்திப்படுத்துவதற்காக பொலிஸார் முறையற்ற வகையில் செயற்பட்டால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மெதிரிகிரிய பகுதியில் புதன்கிழமை (15) இரவு நடைபெற்ற பொதுமக்களுடனான சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
பாதாள குழுக்களை கைது செய்வதாகவும், போதைப்பொருட்களை கைப்பற்றுவதாகவும் அரசாங்கம் குறிப்பிடுகிறது.ஆனால் சுங்கத்தில் இருந்து பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் பற்றி ஏதும் குறிப்பிடுவதில்லை.
அனைத்து குற்றங்களையும் ராஜபக்ஷர்கள் மீது சுமத்துவதையே இந்த அரசாங்கம் பிரதான கொள்கையாக கொண்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கமும் இவ்வாறே செயற்பட்டது.இறுதியில் நாட்டு மக்கள் நெருக்கடிக்குள்ளானார்கள்.
இந்த அரசாங்கமும் எம்மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.அந்த குற்றச்சாட்;டுக்களை சட்டத்தின் முன் நிரூபித்து உண்மையை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட வேண்டிய தேவை எமக்கு உள்ளது.
பொலிஸ் திணைக்களம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகிறது.ஆட்சியாளர்களை திருப்திப்படுத்துவதற்காக பொலிஸார் முறையற்ற வகையில் செயற்பட்டால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும்.
மாகாணசபைத் தேர்தல் பற்றி பேசப்படுகிறது. நாங்கள் எந்தத் தேர்தல்களுக்கும் தயார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மாகாணசபைத் தேர்தலை ஜனநாயக ரீதியில் நடத்தினார்.ஆகவே தேர்தலை கண்டு நாங்கள் அச்சமடைய போவதில்லை என்றார்.

