
வூப்பெற்றால் 15.10.2025
அமரர். திரு. யோகராசா சிறீஸ்கந்தராஜா (சிறி).
தாயகத்தில்: திருகோணமலை, தமிழீழம்.
வாழ்விடம்: பேர்லின், யேர்மனி.
தென்தமிழீழத்தின் மட்டக்களப்பு மண்ணிலே அவதரித்து, தமிழீழத்தின் தலைநகராம், இயற்கை எழில்கொஞ்சும் திருகோணமலையிலே வாழ்ந்து, பின்னர் ஆயிரத்துத் தொழாயிரத்து எண்பத்தோராம் ஆண்டு புலம்பெயர்ந்து, யேர்மனிய தேசத்தினது தலைநகரான பேர்லினில் வாழ்ந்து வந்தவரான, தமிழீழத் தேசியச் செயற்பாட்டாளராக அறியப்பட்டு, எல்லோராலும் சிறியண்ணாவெனப் பேரன்பு கொண்டு அழைக்கப்பெற்ற யோகராசா சிறீஸ்கந்தராஜா அவர்கள், உடல்நலக் குறைவினால் சாவினைத் தழுவிக் கொண்டாரெனும் செய்தியறிந்து பெருந்துயர் சூழ அவருக்கான புகழ் வணக்கத்தினைச் செலுத்துகின்றோம்.
ஒரு இன அடையாளத்தின் மூலமாக மக்கள் திரள் கூட்டுச்சேரும் புலம்பெயர் பெருந்தளத்திலே, சிறியண்ணா அவர்கள் தமிழீழ தேசத்தின் முன்மாதிரி அடையாள முகமாகத் தெரியப்பட்டவர்.தனது இளமைப்பருவ காலந்தொட்டு எமது தாய்த்திருநாட்டிலே, சமூக அக்கறையும், மொழிப்பற்றும், இனவிடுதலை உணர்வும் மிக்கவராகவும், சைவத்தின் பெருமைபூத்த திருகோணமலையிலே சைவசமய மன்றத்திலும் நற்பணியாற்றினார். தனது இளமைக்கால அனுபவங்களின் தொடர்ச்சியைப் புலம்பெயர்ந்து யேர்மனிய தேசத்திற்குள் வந்தவுடனேயே ஆரம்பித்து, தனது சுய நினைவுகளை இழக்கின்ற நாள்வரை இடைவிடாது தன்னை முழுமனதோடு அர்ப்பணித்து உழைத்தார்.
தமிழீழ மகக்களது நீதியின் குரலையும், அதனூடாகத் தமிழ்த்தேசிய இனம் பேரவாக்கொண்டு தாங்கிச்சுமக்கும் விடுதலைப் பெருங்கனவின் உணர்வலைகளையும், தமிழீழ தேசத்தின் நாள் நிலவரங்களையும், வானொலிகள், மற்றும் தொடர்புசாதனங்கள் மூலமாக, புலம்பெயர் எமது சமூகப்பரப்பு நோக்கி உயிர்ப்போடு உந்தித் தள்ளிய அவரது ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு, அன்புத் துணைவியாரான அமரர். ரதி சிறீஸ்கந்தராஜா அவர்களும் இணைந்தே செயற்பட்டதனை மக்களது உணர்வலைகள் என்றும் மறந்துவிடாது.
தனது முழுமையான திறன்களையும் கூட்டுச்சேர்த்து, மிக நேர்த்தியாகவும், உறுதியாகவும் பாடுபடுவதற்கு தன்னிடம் மிகைநிரம்பியிருந்த ஆங்கில மொழிப் புலமையினையும் ஆதாரமாகக் கொண்டார். பல்தேசிய கலாச்சார மற்றும் மொழிவழிச் சமூகத்தின் மையத்திலே எமது அரசியல் அபிலாசைகளைப் பகிர்ந்தார். தமிழ்த்தேசியத்தின் உள்ளீடுகளிலே மலர்ந்து நிறைந்திருக்கும் தமிழீழத் தேசிய அடையாளங்களை அவர் எப்போதும் கையிலேந்திய மனிதராகவே வலம் வந்தார். உடலின் உபாதைகளால் சக்கரநாற்காலியிலே மாற்றுத் திறனாளியாக இருந்தபோதும், ஒரு சிறு துளியேனும் சக செயற்பாட்டாளர்களுக்கு இடைவிடாத அவரது உறுதிமிக்க முன்னகர்வுகள், ஒவ்வொரு சனநாயகப் போர்த் தளங்களிலும், வணக்க மற்றும் எழுச்சி நிகழ்வுகளிலும் முன்வரிசையிலே தரித்து நின்றதை வரலாறு சொல்லும்.
தன்னிடம் இருக்கின்ற ஆகக் கூடிய வாய்ப்புக்களையும், வசதிகளையும், வழிமுறைகளையும் அவர் எப்போதும் தமிழீழ தேசத்தின் உயர்வுக்காகவே சுமந்து சுவாசித்தார் என்பதை நாமெல்லோரும் அறிவோம். பூகோள அரசியல் நிலவரங்களை அறிந்து, அதனூடாகத் தமிழீழத் தேசிய ஆன்மாவின் உயிர்த்துடிப்பினைத் தாங்கிப் பயணித்த ஒரு அற்புதமான வரலாற்று மனிதராகவே எல்லோராலும் நேசிக்கப்பட்டார். ஒரு விடுதலைச் செயற்பாட்டாளனிடம் இருக்க வேண்டிய இணையற்ற முதன்மைப் பண்பான புரிந்துணர்வு என்பது அவரிடம் தாராளமாகவே காணப்பட்டதன் விளைவிலிருந்துதான் உடல் உபாதைகளைப் பொருட்படுத்தாத, இடைவிடாத தனது இயல்பான வாழ்வியலைத் தேசவிடுதலைக்கான தளத்திலே புடமிட்டிருந்தார் என்பது மிகையாகாது.

ஆரம்பகாலங்களிலே புலம்பெயர்ந்து யேர்மனிய தேசம் நோக்கி வருகைதந்து பேர்லின் பெருநகரிலே, புகலிடத் தஞ்சம் கோரும் எமது உறவுகளுக்கு தன்னாலான உதவிகளை விருப்போடு, தேடிச் சென்று ஆற்றியதை இன்றும் மக்கள் நன்றியோடு நினைவுபடுத்துவார்கள். மனிதநேயம் மிக்க அவரது பண்பின் ஊற்றிலிருந்து சிறிதுகாலம் ஈழத்தமிழர் நலன்புரிச் சங்கம் எனும் அமைப்பினையும் தலைமையேற்று வழிநடாத்தினார்.
தாய்மொழியின் பாதுகாப்பினையும், வளர்ந்துவரும் இளந்தலைமுறையினரின் தாய்மொழித் தேர்ச்சிக்குமாக அயராது பாடுபட்டார். இதன்பால் பேர்லின் தமிழாலயத்தின் உதவி நிருவாகியாகவும், நிருவாகியாகவும் செயலாற்றி, தன்சக செயற்பாட்டாளர்களோடு பண்பாட்டு வாழ்வியலைப் பேணும் பணி தொடர்ந்தார். எப்போதுமே குன்றிடாத புன்னகைதான் அவரை அறிந்தோருக்கும், ஆழமாகப் பழகியோருக்கும் முன்தெரிந்த அடையாளக் குறியாகும். இத்தகைய உயர்குணாளனை இழந்துநிற்கும் உறவுகளின் மனப்பாரமென்பது சொல்லிலடங்காதவை. எத்தனையோ அர்த்தங்கள் குவிக்கப்பட்ட அவரது மனத்துணிச்சலை, காலம் எங்கோ தூரத்தில் உருண்டுகொண்டு இருந்தாலும், எங்கும் விலகிச் செல்ல விடாது அவரை நேசித்துநின்ற தேசத்து உறவுகளின் மனத்திரையினைத் துளையிட்டுக்கொண்டேயிருக்கும்.
இவரது பிரிவுத் துயர் சுமந்துவாடும் குடும்ப உறவுகள், நண்பர்கள், அயலவர்கள், தாயக, புலம்பெயர்ந்த உறவுகளோடு நாமும் எமது துயரினைப் பகிர்ந்து, அவரது ஆன்மா அமைதிபெற இயற்கைதனை வேண்டி, அவர் தாங்கிச் சுமந்த தேசப்பணிகளைத் தாங்கிச் சுமந்து, எமது விடுதலைக்காக தொடர்ந்தும் பாடுபடுவோமென உறுதிகொள்வோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
இறுதி அஞ்சலி நிகழ்வு எதிர்வரும் 23-10-2025 வியாழக்கிழமை 11 :00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும்.
அஞ்சலி நிகழ்வு நடைபெறும் முகவரி Krematorium( Ruhleben )
Am Hain 01
13597 Berlin



