போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளருக்கு இடமாற்றம்!

48 0

தெற்கு கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த, நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் தொகையை கைப்பற்றுவதற்கு தகவல் வழங்கிய, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் ஹேமால் பிரசாந்தவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அவர் பொலிஸ் களப் படைத் தலைமையகத்தின் பதில் கட்டளை அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இடமாற்றத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

தனது 31 வருட கால சேவையில் அவர் மீது எவ்வித ஊழல் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர் சுமார் இரண்டு வருடங்களாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றி வந்தார்.

அவரது பதவிக் காலத்தில் சுமார் இரண்டு தொன் போதைப்பொருள், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டமை விசேட அம்சமாகும்.

பாரியளவில் போதைப்பொருள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதைத் தடுக்கும் நோக்கில், “க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத் திட்டத்திற்கு இணையாக, மீனவப் படகு உரிமையாளர்கள், படகோட்டிகள் (ஸ்கிப்பர்கள்) மற்றும் உதவியாளர்களை தெளிவூட்டும் பல நிகழ்ச்சித் திட்டங்களை ஹேமால் பிரசாந்த நாடளாவிய ரீதியில் முன்னெடுத்திருந்தார்.

இதன் காரணமாக, தென்பகுதி படகோட்டிகள் பெருமளவில் போதைப்பொருளை கரைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளில் இருந்து விலகியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், கடற்படையினரால் ஆழ்கடலில் கைப்பற்றப்பட்ட மேலும் பல படகுகள் விரைவில் கரைக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

அவர் வழங்கிய தகவல்களையடுத்து கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே, தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில் மிதந்து கொண்டிருந்த 51 பொதிகளில் இருந்து 839 கிலோகிராம் நிறையுடைய போதைப்பொருள் மீட்கப்பட்டது.

அந்த பொதிகளில் 670 கிலோகிராம் ‘ஐஸ்’, 156 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் சுமார் 12 கிலோகிராம் ஹஷீஷ் என்பன அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டமை சிறப்பம்சமாகும்.