அமைச்சரவை மறுசீரமைப்புக்கும், கொள்கலன் விவகாரத்துக்கும் தொடர்பில்லை!

51 0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தீர்மானத்துக்கமைய கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்புக்கும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுங்கத்துறையால் சர்ச்சைக்குரிய வகையில் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளுக்கும் தொடர்பிருப்பதாக முன்வைக்கப்படும் கூற்றை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நிராகரித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (14) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது. இதன் போது அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் அமைச்சுப் பொறுப்பு மாற்றப்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த போதே அமைச்சரவை பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.

கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் மற்றும் அதுபோன்று கடந்த காலத்தில் இடம்பெற்ற 14 சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் சுதந்திரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவற்றுக்கும் அண்மைய அமைச்சரவை மாற்றங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

கடந்த ஒரு வருட காலமாக, நாம் இந்த அமைச்சுக்களை நிர்வகித்து வருவதால், அவற்றின் செயற்பாடுகள் குறித்து இப்போது எங்களிடம் தெளிவான புரிதல் உள்ளது. அதற்கேற்ப அரசாங்கம் இப்போது அதன் வரவுசெலவுத் திட்டத்தைத் தயாரித்து, அதன் கொள்கைகள் மற்றும் வியூகங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த அமைச்சரவை மறுசீரமைப்பு, இந்த பரந்த மறுசீரமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாகும் எனக் குறிப்பிட்ட அவர், ஆழ்ந்த இலக்குகளைக் கொண்ட சில அமைச்சுக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு, நிர்வாகத் திறனை மேம்படுத்த பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.