பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை மற்றும் 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட சகல போர்க்குற்றங்கள் தொடர்பிலும் உள்நாட்டு நீதிமன்றத்திலோ அல்லது சர்வதேச நீதிமன்றத்திலோ அல்லது ஏதேனும் அமைப்புக்கள் முன்னிலையிலோ சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்தி மரணதண்டனைக்கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவினால் சிலைச்சாலையில் இருந்து அவரது சட்டத்தரணி ஊடாக வழங்கப்பட்டுள்ள சத்தியக்கடதாசி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் கையளிக்கப்பட்டிருப்பதுடன், அதன் பிரதி இவ்வாரம் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.
பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஊடாக 09.07.2025 எனும் திகதியிடப்பட்ட கடிதமொன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைத்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திய குற்றங்கள், வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் மனிதப்புதைகுழிகள் தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும் சோமரத்ன ராஜபக்ஷ அறிவித்திருந்தார். அதுமாத்திரமன்றி இந்த உண்மைகளை வெளிப்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாக சத்தியக்கடதாசி வழங்குவதற்கும் அவர் இணங்கியிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் மேற்குறிப்பிட்ட விடயங்களுடன் தொடர்புடைய சில உண்மைகளையும், எதிர்வருங்காலங்களில் சாட்சியம் வழங்குவதற்குத் தயாராக உள்ள விடயங்களையும் உள்ளடக்கி கடந்த 4 ஆம் திகதி சிறைச்சாலையில் சோமரத்ன ராஜபக்ஷ தனது சட்டத்தரணி முன்னிலையில் சத்தியக்கடதாசி வழங்கியுள்ளார்.
அண்மையில் சோமரத்ன ராஜபக்ஷவினால் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பிலும், அதற்கு அப்பாலும் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் ‘வீரகேசரி’ வாரவெளியீட்டில் விரிவாகப் பிரசுரிக்கப்பட்டிருந்த பின்னணியில், அவரால் வழங்கப்பட்டுள்ள சத்தியக்கடதாசியின் உள்ளடக்கத்தின் சுருக்கம் வருமாறு
இந்த சத்தியக்கடதாசியில் குறிப்பிடப்பட்டிருக்கும் சோமரத்ன ராஜபக்ஷவே நான் என்பதையும், இவ்விடயங்களை எனது தனிப்பட்ட அறிவு மற்றும் எனக்கு வழங்கப்பட்ட சட்ட ஆலோசனைகளின் பிரகாரம் வழங்குகிறேன் என்பதையும் உறுதிப்படுத்துகின்றேன். யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்களுக்கும், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்துக்கும் தகவல்களைத் தெரியப்படுத்தும் நோக்கில் நான் இந்த சத்தியக்கடதாசியை சிறைச்சாலையில் இருந்தவாறு எனது சட்டத்தரணி ஊடாக வழங்குகின்றேன். இந்த சத்தியக்கடதாசியானது 09.07.2025 எனும் திகதியிடப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தின் நீட்சியாகவும், அக்கடிதத்தில் விபரிக்கப்பட்டிருந்த விடயங்கள் உள்வாங்கப்பட்டதாகவும் அமைந்திருக்கின்றது.
எனவே மனைவி ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த அக்கடிதம் 03.08.2025 ஆம் திகதி வெளியான ‘வீரகேசரி’ பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்ததுடன், அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சகல விடயங்களும் உண்மையானவை என்பதை தமிழ்ச்சமூகத்துக்கு மீளுறுதிப்படுத்துகின்றேன்.
அதேபோன்று இலங்கை நீதிமன்றத்திலோ அல்லது சர்வதேச நீதிமன்றத்திலோ சாட்சியமளிப்பதற்கு எனக்கு நியாயமானதொரு வாய்ப்புக் கிடைக்கும் பட்சத்தில், இதற்கு முன்னரும், தற்போதும் வெளிப்படுத்திய விடயங்களுக்கும் அப்பால் வலுவான ஆதாரங்களை வழங்குவதற்குத் தயாராக இருக்கிறேன் என தமிழ்ச்சமூகத்துக்கு உறுதியளிக்கின்றேன்.டிஜிட்டல் சந்தா
1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சகல போர்க்குற்றங்கள் தொடர்பிலும் உண்மைகளை வெளிப்படுத்துவதற்குத் தயாராக இருப்பதுடன் அதனைச்செய்வதற்கு தமிழ்ச்சமூகத்தின் ஒத்துழைப்பைக் கோருகின்றேன்.
அதேவேளை கிருஷாந்தி குமாரசுவாமியின் உடல் மாத்திரம் கண்டறியப்பட்டமைக்கு, அப்பகுதியை மாத்திரம் அடையாளம் காண்பதற்கு இராணுவப் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளே காரணமாகும். ஏனெனில் நாம் ஏனைய பகுதிகளையும் அடையாளம் காண்பித்துவிடுவோம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர்கள் அவ்வாறு இயங்கினார்கள். அத்தோடு ஆரம்பத்திலிருந்து அவர்கள் இராணுவத்தில் இருந்த உயரதிகாரிகளைப் பாதுகாப்பதை இலக்காகக்கொண்டே செயற்பட்டார்கள்.
இவ்வாறானதொரு பின்னணியில் கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை மற்றும் இலங்கை இராணுவ அதிகாரிகள் சிலர் புரிந்த குற்றங்களின் விளைவாகக் காணாமல்போனோர் தொடர்பில் உண்மைகளையும், ஆதாரங்களையும் வெளிப்படுத்துவதற்கு அவசியமான உதவிகள், பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை எனக்குப் பெற்றுத்தருவதற்கு உங்களது அமைப்பு அல்லது அலுவலகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.
அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்குத் தெரிந்து நடைபெற்ற இக்கொலைகளுக்குப் பொறுப்பானவர்களைத் தண்டிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கோருகின்றேன்.
மேலும் எனக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறுஜனாதிபதியிடம் கோருவதுடன், எத்தகைய தடைகள் வந்தாலும் உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு எனது இயலுமைக்கு உட்பட்ட அனைத்தையும் செய்வதற்குத் தயாராக இருக்கின்றேன். நானறிந்தவரை கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்குடன் தொடர்புடைய ஏனைய ஐவரும் உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு முன்வந்திருக்கின்றார்கள். எனவே கிருஷாந்தி குமாரசுவாமி வழக்கை மறுபரீசிலனை செய்து, நியாயமான வழக்கு விசாரணையை முன்னெடுக்குமாறும், எம்மை சாட்சியாளர்களாக்குமாறும் கோருகின்றேன் என அந்த சத்தியக்கடதாசியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 1998 ஆம் ஆண்டு கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வெளிப்படுத்திய செம்மணி படுகொலை மற்றும் மனிதப்புதைகுழி பற்றிய உண்மைகள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் சிறைச்சாலைக்குள் தனக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதம், சிறைச்சாலைக்குள் தன்னைக் கொல்வதற்கு இடம்பெற்ற முயற்சி, தனது குடும்பத்தினருக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல், 1999 ஆம் ஆண்டு குமார் பொன்னம்பலத்திடம் தெரியப்படுத்திய விடயங்கள், குமார் பொன்னம்பலம் கொல்லப்பட்டதை அடுத்து அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அனுப்பிவைத்த இரங்கல் கடிதத்தில் அவர் கொல்லப்படுவதற்கு முந்தைய தினத்தின் திகதி இடப்பட்டிருந்தமை, 1999 ஆம் ஆண்டு சில மனிதப்புதைகுழிகளைக் காட்டிக்கொடுத்த போதிலும், பொதுமன்னிப்பு வழங்குவதாகவும், ஏனைய மனிதப்புதைகுழிகளைக் காட்டிக்கொடுக்கவேண்டாம் எனவும் சந்திரிக்கா குமாரதுங்க வலியுறுத்தியதன் பிரகாரம் ஏனைய மனிதப்புதைகுழிகளைக் காட்டிக்கொடுக்காமை, 1996 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணத்தில் செம்மணியில் மாத்திரமன்றி 522 பிரிகேட்ஸ் தலைமையகத்திலும், ஏனைய சில இராணுவ முகாம்களிலும் சித்திரவதைக்கூடங்கள் இயங்கியமை, அரியாலையில் இயங்கிய 7 ஆவது இலங்கை காலாட்படை இராணுவ முகாம் அதிகாரிகளால் செம்மணி – தவல்கடசந்தி முகாம் வரையான பகுதியில் பொதுமக்கள் கைதுசெய்யப்பட்டமை, அங்கு சித்திரவதைகளில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மணியம் தோட்டம் எனும் பகுதியில் புதைக்கப்படல், அவ்வாறு கைதுசெய்யப்பட்ட சிலரை விடுவிப்பதற்குத் தான் உதவிய சந்தர்ப்பங்கள் என்பன உள்ளடங்கலாக சோமரத்ன ராஜபக்ஷவின் வெளிப்படுத்தல்கள் என ‘வீரகேசரியில்’ ஏற்கனவே விரிவாகப் பிரசுரிக்கப்பட்ட விடயங்களும் அதில் உட்சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த சத்தியக்கடதாசியின் ஒரு பிரதி கடந்த வார நடுப்பகுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் கையளிக்கப்பட்டதுடன், மற்றுமொரு பிரதி இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் அதிகாரிகளிடம் இவ்வாரம் கையளிக்கப்படவுள்ளது. அத்தோடு மேலும் ஒரு பிரதி இலங்கையில் இயங்கிவரும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

