ஊடகவியலாளர் தரங்க குணரத்னவுக்கு அச்சுறுத்தல்

36 0

ஊடகவியலாளர் தரங்க குணரத்னவுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக, சுதந்திர ஊடக இயக்கம் பொலிஸ்மா அதிபரிடம் தெரிவித்து அவரது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.

வெலிகம பகுதியைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர் தரங்க குணரத்ன, தெஹிபால என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒருவரால் கொலை மிரட்டல்களைப் பெற்றதாகப் முறைப்பாடளித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த செய்தி அறிக்கையைத் தொடர்ந்து, ஒக்டோபர் 8 ஆம் திகதி தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தரங்க குணரத்ன ஒக்டோபர் 9 ஆம் திகதி மிதிகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.

இருப்பினும், பொலிஸ் விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் தனது உயிருக்கு தற்போது ஆபத்து இருப்பதாக அவர் மேலும் கவலை வெளியிட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய அண்மைய கொலைகளை கருத்தில் கொண்டு, இதனை நிராகரிக்க முடியாது என சுதந்திர ஊடக இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இத்தகைய அச்சுறுத்தல் ஊடகவியலாளர்கள் தங்கள் தொழில்முறை கடமைகளை சுதந்திரமாகச் செய்வதைத் தடுக்கிறது.

இதனால் ஊடக சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என சுதந்திர ஊடக இயக்கம் குறிப்பிடுகிறது.

எனவே, சுதந்திர ஊடக இயக்கம் இந்த அச்சுறுத்தலை வன்மையாகக் கண்டிப்பதோடு, விசாரணையை விரைவுபடுத்தி, ஊடகவியலாளர் தரங்க குணரத்னவின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்குத் அறிவித்துள்ளது.