முதல் பெண் மாவீரர் லெப்டினண்ட் மாலதி அவர்களின் 38ஆவது நினைவெழுச்சி நாள் – லண்டவ்

166 0

முதல் பெண் மாவீரர் லெப்டினண்ட் மாலதி அவர்களின் 38ஆவது நினைவெழுச்சி நாள் லண்டவ் நகரிலே 11.10.2025ஆம் நாள் சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. 17:15மணிக்கு தொடங்கிய நிகழ்வில் லண்டவ் தமிழாலய ஆசிரியர் திரு. சுப்பிரமணியம் சிவானந்தன் அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார். தமிழீழ தேசியக்கொடியினை யேர்மன் மாவீரர் பணிமனைச் செயற்பாட்டாளர் திரு. நாராயணபிள்ளை தேவஞானம் ஏற்றிவைத்தார். முதல் பெண் மாவீரர் லெப்டினண்ட் மாலதி அவர்களின் திருவுருப்படத்துக்கான ஈகைச்சுடரைத் திருமதி வினுஜா ராஜ்குமார் அவர்கள் ஏற்றிட, மலர்மாலையைத் திருமதி ரேணுகா கணேசானந்தன் திருமதி ஜெனிபா தினேஸ்குமார் ஆகியோர் அணிந்தமையைத் தொடர்ந்து மலர் மற்றும் சுடர்வணக்கத்தோடு நினைவெழுச்சிநாளிற்கு வருகைதந்திருந்த தமிழீழ உறவுகள் அனைவரும் இணைந்து கொண்டனர்.

வில்லிசை, எழுச்சிப்பாடல்கள், நாடகம், கவிதையெனத் தொடர்ந்த நிகழ்விலே தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள் சிறப்புரையாற்றினார். தமிழீழ தனியரசுக்கான செயற்பாட்டில் எழுச்சி பெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சியின் 40ஆவது அகவை நிறைவைக் குறிக்கும் வகையில் ஷசூரியப் புதல்விகள் | பாகம்2 இசைத்தொகுப்பு வெளியிடப்பட்டது. திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்களின் அறிமுகவுரையைத் தொடர்ந்து யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்புப் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன் அவர்கள் வெளியிட்டு வைக்க றைன்லாண்ட்பாள்ஸ் மாநிலப் பொறுப்பாளர் திரு. சபாபதி விமலநாதன் பெற்றுக்கொண்டார். நிறைவாகத் தேசியக்கொடி கையேற்பைத்தொடர்ந்து தமிழீழ விடியலுக்கான உறுதி கொண்ட தமிழீழ மக்களின் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற நம்பிக்கையை பதிவுசெய்து 20:30 மணிக்கு நிறைவுற்றது.