பொதுநலவாய நாடுகளில் பெண்கள் அச்சமின்றி, துன்புறுத்தல் மற்றும் வன்முறையிலிருந்து விடுபட்டு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்காக, பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்துடன் இணைந்து செயல்படுவதற்கு இலங்கை தயாராக உள்ளதாக, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
“வெறுப்பு இல்லாத விவாதத்திற்கு” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற பொதுநலவாய மகளிர் பாராளுமன்ற மாநாட்டில் உரையாற்றும்போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
பார்படோஸ், பிரிட்ஜ்டவுனில் நடைபெறும் 68வது பொதுநலவாய பாராளுமன்ற மாநாட்டின் (CPC) ஒரு துணை மாநாடாக உள்ள 9வது மகளிர் பாராளுமன்ற மாநாடு, பல பயிலரங்குகளைக் கொண்டிருந்தது.
அதில், “DebateNotHate: Not Accepting Abuse as an Outcome of Free Speech” என்ற தலைப்பில் நடைபெற்ற பயிலரங்கில், அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ல்ராஜ் விவாதக் குழு உறுப்பினராகப் பங்கேற்றார்.
இந்தப் பயிலரங்கில், அரசியலில் ஈடுபடும் பெண்களைப் பாதுகாப்பதற்காக பேச்சு சுதந்திரத்தை துன்புறுத்தல் மற்றும் இழிவுபடுத்துதலுக்காக தவறாகப் பயன்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவருதல், டிஜிட்டல் இடத்தை பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.
அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் மரியாதைக்குரிய தளத்தை உருவாக்குவதற்காக
01. சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தை விதிமுறைகளை அறிமுகப்படுத்துதல்
02. நிறுவன பாதுகாப்பு மற்றும் சட்டத்தை அமுல்படுத்துதல் உள்ளிட்டவற்றில் வெளிப்படைத்தன்மையை பேணுவதற்கு நல்ல நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளுதல்
03.பாராளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் பணிக்குழாமிற்கும் பாலின உணர்திறனை வளர்ப்பதற்கும் உணர்திறன் மற்றும் கட்டுப்பாட்டுடன் செயல்பட கட்டாய பயிற்சித் திட்டங்களை நடத்துவது உட்பட, எடுக்கக்கூடிய பல உடனடி நடவடிக்கைகளை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த யோசனைகள் பொதுநலவாய மகளிர் பாராளுமன்ற பிரதிநிதிகளின் பாராட்டுதலுக்கு உள்ளாகியுள்ளன.
அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், இலங்கை பாராளுமன்ற பெண்கள் மன்றத்தின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.
இந்தப் பயிலரங்கில், ஏனைய விவாதக் குழு உறுப்பினர்களாக குர்ன்சி பாராளுமன்ற உறுப்பினர் சாஷா கசான்சேவா-மில்லர் மற்றும் பிரித்தாயாவின் விர்ஜின் தீவுகளின் சட்டமன்ற சபாநாயகர் கோரின் என். ஜோர்ஜ்-மாசிகோட் ஆகியோரும், பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதிநிதிகள் மற்றும் பணியாளர்களும் பங்கேற்றனர்.

