நாட்டின் தேர்தல் செயன்முறைகளை வலுப்படுத்த சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கான வாய்ப்புகளை கண்டறியும் நோக்கில், ஐக்கிய நாடுகளின் தேர்தல் தொழில்நுட்பத் தேவை மதிப்பீட்டுப் பணிக்குழுவின் பிரதிநிதிகள் குழுவினர் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பாராளுமன்றப் பிரதிநிதிகளைச் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்புக்கள் 2025.10.07ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றன.
அதற்கமைய, ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் குழுவினர், பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தனர்.
அதனையடுத்து, அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனும், பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுடனும் சந்திப்புகளை நடத்தினர்.
இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு அமைய, ஐக்கிய நாடுகளின் தேர்தல் தொழில்நுட்பத் தேவை மதிப்பீட்டுப் பணிக்குழுவின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்ததுடன், அரசாங்கப் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள், தேர்தல் மேற்பார்வையாளர்கள், சிவில் சமூகம் மற்றும் நாட்டின் அபிவிருத்திப் பங்காளர்கள் உள்ளிட்ட பல பங்குதாரர்களுடன் கலந்துரையாடுவதே அவர்களின் நோக்கமாகும்.
இலங்கையின் தேர்தல் முறையின் செயற்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் உள்ளடக்கிய தன்மை என்பவற்றை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அதற்கமைய, நாட்டின் தேர்தல்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை வலுப்படுத்துதல், பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துதல், அரசியல் அறிவு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வை மேம்படுத்துதல், தேர்தல் செயன்முறையை டிஜிட்டல்மயமாக்கல், வாக்காளர்களுக்கு அதிகாரம் அளித்தல், வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாத்தல், அரசியலில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டறிதல் போன்ற துறைகள் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டன.
ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் குழு நாட்டின் தேர்தல் ஆணைக்குழுவின் பணிகளைப் பாராட்டியதுடன், இலங்கையின் தேர்தல் செயன்முறையின் நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து அவர்கள் திருப்தியை வெளிப்படுத்தினர்.
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள மற்றும் எதிர்காலத்தில் செயற்படுத்தப்படவுள்ள தேர்தல் சீர்திருத்தங்களுக்கு தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை தயாராக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்புகளில், ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் அதிகாரிகளான தேர்தல் உதவிப் பிரிவின் பணிப்பாளர் மிச்செல் கிரிஃபின் (Michele Griffin), தேர்தல் கொள்கை நிபுணர் டான் மலினோவிச் (Dan Malinovich), அரசியல் விவகார அதிகாரி (ஆசியா மற்றும் பசிபிக் பிரிவு) அமண்டா ஸ்டார்க் (Amanda Stark) மற்றும் அரசியல் / தேர்தல் விவகார அதிகாரி மிக்யோங் கிம் (Mikyong Kim) ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன், இலங்கை பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) இலங்கைக்கான உள்ளடக்கிய ஆளுகைக்கான குழுத் தலைவர் சந்திரிகா கருணாரத்ன மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) இலங்கைக்கான ஊடக மற்றும் பாராளுமன்ற நிபுணர் சதுரங்க ஹபுஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

