புலரும் பூபாளம் யேர்மனி 2025. தாயகம் நோக்கிப் புறப்பட்டது.!

148 0

புலரும் பூபாளம்
யேர்மனி 2025.
திட்டத்தினூடாக முன்பள்ளிகளுக்கான இலத்திரனியல்க் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

யேர்மனியின் மத்திய மாநிலத்தில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டின் “புலரும் பூபாளம் ” பல்சுவை நிகழ்ச்சித்திட்டத்தினூடாக, மக்களால் வழங்கி வைக்கப்பட்ட அன்பளிப்பு நிதியிலிருந்து, திட்டமிடப்பட்டவாறே தாயகத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய மற்றும் அவசிய தேவையுடைய நிலையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இருபது (20) முன்பள்ளிகளுக்கான இலத்திரனியல்க் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பெற்றது.

நவீன கற்பித்தல் நடைமுறை அலகுகளின் இலகுபடுத்தலுக்கான இவ் உதவித்திட்டமானது, நீண்டகாலமாக எவராலும் வழங்கப்படாத நிலையிலே இருந்தமையைப் புலரும் பூபாளமூடாக யேர்மனிய தேசத்திலே புலர்ந்து வாழ்ந்துவரும் எமது மக்களால் தற்போது வழங்கி வைக்கப்பட்டமையானது, முன்பள்ளிச் சிறார்களின் மனமகிழ்ச்சிக்கானதும் சிறந்த பயனுள்ள அடையாளமுமாகும்.

இவ் உதவி வழங்கல் நிகழ்வானது, 04.10.2025 சனிக்கிழமை அன்று தாயக நேரம் காலை 10.30 மணிக்கு, கிளிநொச்சியிலுள்ள கூட்டுறவு மண்டபத்திலே நடைபெற்றது. சிறுவர்களுக்கான கல்விசார் திட்டங்களிலே எம்மோடு இணைந்து செயலாற்றும் “வானவில் வாழ்வகம்” இணை அனுசரனையாளர்களாக ஒழுங்கமைத்திருந்த இந்நிகழ்விலே, கிளிநொச்சி வடக்கு, தெற்கு கல்வி வலையங்களின் ஆரம்ப முன்பின்ளைப்பருவ அபிவிருத்திப் பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கண்டாவளைக் கோட்டக்கல்வி அதிகாரி, முன்பள்ளிகளின் இணைப்பாளர்கள், உதவிகளைப் பெற்றுக்கொண்ட முன்பள்ளிகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், வானவில் வாழ்வகத் தொண்டர்கள் மற்றும் நலன் விரும்பிகளெனப் பலரும் கலந்துகொண்டனர்.

முன்பள்ளிச் சிறார்களின் கலை நிகழ்வுகள், வாழ்த்துரை, சிறப்புரைகள் என்பன இடம்பெற்றதோடு, தாயக உறவுகளின் நல்வாழ்வுக்காக தொடர்ந்தும் பாடுபட்டுவரும் புலம்பெயர்ந்த யேர்மனிய உறவுகளின் உபசரனை மற்றும் போக்குவரத்து உதவிகள் உட்பட, ஏழு இலட்சத்தி இருபத்தையாயிரம் ரூபா (725,000/=) நிதி செலவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.