பிரான்சில் கடும் பொருளாதார நெருக்கடி: நாடு தழுவிய வேலைநிறுத்தம் – ஈபிள் கோபுரம் மூடல்!

40 0

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் விதமாக பிரான்ஸ் அரசாங்கம் வரவு செலவுத் திட்ட செலவினங்களைக் குறைத்தது. சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அத்தியாவசியத் துறைகளுக்குக் குறைவான நிதி ஒதுக்கப்பட்டதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்த சூழலில், நாட்டின் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னு நியமிக்கப்பட்டார். எனினும், இவரது நியமனம் போராட்டக்காரர்களை மேலும் தூண்டியது. இதன் விளைவாக, போராட்டக்காரர்கள் ‘அனைத்தையும் தடுப்போம்’ (Block Everything) என்ற இயக்கத்தைத் தொடங்கி, நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

அழைப்பை ஏற்று, தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட பிரான்ஸின் முக்கிய நகரங்களில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் திரண்டனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக ரயில் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டன.

போராட்டத்தின் எதிரொலியாக, உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஈபிள் கோபுரம் மூடப்பட்டது. கோபுர நிர்வாகத்தின் பணியாளர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதால், கோபுரம் திறக்கப்படவில்லை.

ஒன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பை அறியாமல் நேரில் வந்த ஏனைய சுற்றுலாப் பயணிகள், ஈபிள் கோபுரத்தைப் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

பிரான்ஸ் அரசு பொதுச் சேவைகளுக்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என்றும், அதற்குப் பதிலாகப் பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.