காசா போர்நிறுத்த ஒப்பந்தம்: ஹமாஸுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை! “நரகமாகும்” என மிரட்டல்!

66 0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க ஹமாஸ் அமைப்புக்கு காலக்கெடு விதித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகச் செய்திகளின்படி, ஹமாஸ் அமைப்பு இந்த ஒப்பந்தத்தை ஏற்க ஞாயிற்றுக்கிழமை, கிரீன்விச் நேரம் (GMT) இரவு 10 மணி (2200) வரை மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், “இந்த கடைசி வாய்ப்பு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், வேறு யாரும் இதுவரை கண்டிராத வகையில், ஹமாஸுக்கு எதிராக ‘அனைத்து நரகமும் (All Hell)’ வெடிக்கும்” என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

டிரம்பின் 20 அம்ச திட்டம்:

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து டிரம்ப் வெளியிட்ட இந்த அமைதித் திட்டத்திற்கு அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் உட்படப் பல உலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

திட்டத்தின் முக்கிய அம்சங்களில் உடனடி போர் நிறுத்தம், பிணைக் கைதிகள் விடுவிப்பு, ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிடுதல் மற்றும் படிப்படியாக இஸ்ரேல் படைகள் காசாவிலிருந்து வெளியேறுதல் ஆகியவை அடங்கும்.

ஹமாஸ் அமைப்பின் அரசியல் அலுவலக உறுப்பினர் ஒருவர், இந்தத் திட்டத்தை இன்னும் ஆராய்ந்து வருவதாகவும், தங்கள் முடிவை விரைவில் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் இந்தக் காலக்கெடு மத்திய கிழக்கு அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. ஹமாஸின் முடிவைப் பொறுத்தே காசாவின் அடுத்தகட்ட நிலைமை தீர்மானிக்கப்படும்.