உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு யாழில் விசேட நிகழ்வு

58 0

உலக குடியிருப்பு தினத்தை (06.10.2025) முன்னிட்டு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (3) காலை 9.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்துகொண்டு, பயனாளர்களுக்கு, அவர்களுக்குரிய வீடுகளுக்கான சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில்  மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதில்  சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, கருணாநாதன் இளங்குமரன் மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் பணிப்பாளர் டி.எல். டீபானி பிரியங்கா மற்றும் பிரதி திட்டப் பணிப்பாளர் பிரியங்கா செனிவிரட்ன ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

இதன்போது தலைமையுரை ஆற்றிய அரசாங்க அதிபர், ஒக்டோபர் 6ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள உலக குடியிருப்பு தினத்தினை முன்னிட்டு நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுடன் இணைந்து மாவட்டச் செயலகம் இந்நிகழ்வினை நடாத்திவருகிறது.

அரசாங்கமானது யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டுவருவதற்கு அமைய மேற்படி அமைச்சு இவ்வாண்டு 1259 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது எனத் தெரிவித்தார்.

மேலும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்னும் 19603 வீடுகளின் தேவைப்பாடுகள் உள்ளதாகவும், கடற்றொழி்ல் அமைச்சரின் சிபாரிசுக்கு அமைய, அமைச்சரவையினால் 10 இலட்சம் பெறுமதியான வீடமைப்புத் திட்டமானது 15 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், 6 பெறுமதியான வீடமைப்புத் திட்டமானது  9 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 620 வீடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்து, இது ஒரு வரப்பிரசாதமாக என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

அத்தோடு, நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய தீவுகளில் வீடமைப்புத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும்போது போக்குவரத்து செலவு அதிகமாக உள்ளதாகவும், அதற்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருவதாகவும், ஆதலால் கடல் போக்குவரத்துக்கு ஏற்ப ஒதுக்கீட்டுத் தொகையினை அதிகரித்து வழங்குவதற்கு கடற்றொழில் அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இதன்போது அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் 40 வீதமான வீடுகள் கொட்டில்களாக இருந்ததாகவும், தற்போது படிப்படியாக மாறி வந்தாலும் அது முழுமை பெறவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய, வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் செயற்றிட்டம் உள்ளதால், மேலும் பல வீடமைப்புத் திட்டங்கள் கொண்டுவரப்படும் எனவும் குறிப்பிட்டார்.

எமது அரசாங்கத்தினால் வீடமைப்புத் திட்ட நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், வீதி, குளங்கள் இறங்குதுறை என்பனவும் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் கூறினார்.

துரித அபிவிருத்தி செய்வதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். நாளைய தினம் குறிகட்டுவான் இறங்குதுறை அபிவிருத்திக்கு அடிக்கல் நாட்டப்படும். அதற்கு போக்குவரத்து நெடுச்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்  பிமல் ரத்நாயக்க வருகைதரவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொழும்புத்துறை இறங்குதுறை அபிவிருத்தி, பரந்தன் இரசாயன தொழிற்சாலையினை மீளச் செயற்படுத்தல் மற்றும் முதலீட்டு வலயம் போன்ற அபிவிருத்தித் திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

போதைப்பொருள்  மற்றும் வாள்வெட்டு ஆகியவற்றை முற்றாக ஒழிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும், பொருளாதார ரீதியாக நாடு தற்போது முன்னேறிவருவதாகவும், டொலரின் பெறுமதி சீராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து, இந்த நிகழ்வில் பயனாளிகள் தமக்கான வீடுகளை பெற்றுக்கொண்டமைக்கான சான்றிதழ்களும் தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அமைச்சின் பிரதி திட்டப் பணிப்பாளர் பிரியங்கா செனவிரத்ன, மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா.ஜெயகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன், பிரதம பொறியியலாளர் க. திருக்குமார், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, பிரதேச செயலாளர்கள், மீள்குடியேற்ற கிளை மற்றும் காணி கிளை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக வீடமைப்புத் திட்ட விடய அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.