மீரிகம பகுதியின் கட்டுமானத்திற்கான கடன் தொகை குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராய்வு

55 0

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை-மீரிகம பகுதியின் கட்டுமானத்திற்காகப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படும் கடன் தொகை குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் கடந்த மாதம் 30ம் திகதி கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை-மீரிகம பகுதியின் நீளம் 36.475 கிலோமீற்றர் என்றும், இதன் கட்டுமானத்தைப் பூர்த்தி செய்ய சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறவும், தேவைப்படும் மீதமுள்ள தொகையை உள்ளூரில் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு அமைய, சீனாவின் எக்ஸிம் வங்கியில் பெற்றுக்கொள்ளவிருக்கும் அறவிடப்படும் வட்டி வீதம் தொடர்பில் குழுவில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், சீனாவின் எக்ஸிம் வங்கியில் பெற்றுக்கொள்ளும் கடனுக்கு 2.5% நிலையான வட்டிவிகிதம் காணப்படும்போது,  3.5% வட்டி வீத எல்லைக்கு இணங்கியது ஏன் என்று அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அதிகாரிகள், தற்பொழுது காணப்படும் வீதத்திற்கு அமைய 2.5% வட்டி வீதத்தில் கடனை வழங்க குறித்த வங்கி இணங்கவில்லையென்றும், இதற்கு அமைய மிதக்கும் வட்டி வீதத்திற்கு அமைய ஆகக் கூடியது 3.5% வட்டிவீத எல்லை என்ற அடிப்படையில் கடனைப் பெற இணக்கம் காணப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இருந்தபோதும் இந்த விடயத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இது இலங்கைக்கு பாதகமான சூழ்நிலையை உருவாக்கும் என்றும் குழுவின் தலைவர் கூறினார்.

அதேநேரம், நெடுஞ்சாலை அபிவிருத்தித் திட்டங்களுக்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் பெறப்பட்ட கடனில் ஒரு பகுதியைத் தீர்ப்பதற்காக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் 2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டின் குறைநிரப்பு மதிப்பீடுகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியது.

நெடுஞ்சாலைகளின் கட்டுமானங்களுக்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபை உள்ளூர் வங்கிகளிடமிருந்து பெற்றுக் கொண்ட கடனின் அளவு 310 பில்லியன் ரூபா என்ற எல்லையைத் தாண்டியிருப்பதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி, அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்த, வரவுசெலவுத்திட்டத்தில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 36 பில்லியன் ரூபாயை இந்தக் குறைநிரப்பு மதிப்பீட்டின் ஊடாகப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். இதற்கு அமைய குறித்த குறைநிரப்பு மதிப்பீட்டை ஆராய்ந்த குழு அதனை அங்கீகரித்தது.

அத்துடன், இலங்கை இதுவரை வெளிநாட்டிலிருந்தும் உள்நாட்டிலிருந்தும் எவ்வளவு கடன் வாங்கியுள்ளது என்பது குறித்து குழுவின் தலைவர், பொதுப்படுகடன் முகாமைத்துவக் காரியாலய அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார். இதற்கு அமைய வெளிநாட்டுக் கடன் 37 பில்லியன் டொலர், இலங்கை ரூபாவில் 19.6 ட்ரில்லியன் செலுத்த வேண்டியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் இந்த வருடத்தில் செலுத்தவேண்டிய கடன் தவணையின் அளவு தொடர்பிலும் குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வினவினார். எனினும், அது தொடர்பான புள்ளிவிபரங்கள் அந்த நேரத்தில் அதிகாரிகளிடத்தில் இல்லாமை குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

கடன்களைப் பெறுவதற்கான முழுமையான செயன்முறையும், பொதுப்படுகடன் முகாமைத்துவக் காரியாலயம் கையாழ்வதால் குறித்த நோக்கத்திற்கு திறமையான அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில்  பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, சுனில் ராஜபக்ஷ மற்றும் நிஷாந்த ஜயவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.