அரசாங்கம் தொடர்பில் அண்மையில் எழுந்த சர்ச்சைகளை மறைப்பதற்காக வசீம் தாஜூதீன் விவகாரம் பிரசாரம் செய்யப்படுகிறது. இவற்றை விடுத்து நியாயமான விசாரணைகளை முன்னெடுத்து தாஜூதீனுடைய மரணத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (02) இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தாஜூதீன் கொலை தொடர்பில் விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்படுவது சிறந்ததாகும். ஆனால் தற்போது இடம்பெறுவது விசாரணைகள் அல்ல, பிரசாரமாகும். அரசாங்கம் தொடர்பில் அண்மையில் எழுந்த சர்ச்சைகளை மறைப்பதற்காக இந்த விவகாரம் பிரசாரம் செய்யப்படுகிறது. இவற்றை விடுத்து நியாயமான விசாரணைகளை முன்னெடுத்து தாஜூதீனுடைய மரணத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.
ஆனால் அதனைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேட முயற்சித்தால் அது தவறானதாகும். மறுபுறம் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளும் இன்னும் முழுமையாக நிறைவுக்கு கொண்டு வரப்படவில்லை. எந்தவொரு வேலைத்திட்டத்தையும் அரசாங்கத்தால் திறம்பட முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. குறைந்தபட்சம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்தவற்றை கூட இவர்களால் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை.
இந்த ஓராண்டுக்குள் அரசாங்கத்தின் இயலாமையை மக்கள் நன்கு உணர்ந்து கொண்டுள்ளனர். இன்னும் ஓராண்டு செல்லும் போது இவர்களது உண்மையான முகத்தை மக்களால் மிகத் தெளிவாக உணர முடியும். கடந்த பிரதேசசபைத் தேர்தலில் எமது பலத்தை அதிகரித்து காண்பித்துள்ளோம். மாகாணசபைத் தேர்தலில் அதனை மேலும் அதிகரித்துக் காண்பிப்போம். பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் அடுத்து ஆட்சியமைப்பதற்கான வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வோம் என்றார்.

