தங்காலை சீனிமோதர பகுதியில் மூன்று லொறிகளிலிருந்து 700 கிலோ கிராமுக்கும் அதிகளவான போதைப்பொருள் கைப்பற்ற சம்பவத்தில் போதைப்பொருள் வர்த்தகரான ”பெலியத்த சனா” மற்றும் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் படகின் உரிமையாளர் ஆகியோர் புதன்கிழமை (1) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தங்காலை சீனிமோதர மற்றும் கொடெல்லாவ பகுதியில் கடந்த 22 ஆம் திகதி (திங்கட்கிழமை) ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று லொறிகள் கைப்பற்றப்பட்டன.
குறித்த லொறிகளில் இருந்து சுமார் 700 கிலோ கிராமுக்கும் அதிகளவான போதைப்பொருள் மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் இச்சம்பவத்தில் பிரதான சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பூமிதெலா என்பவரது ஆதரவாளரான பெலியத்த சனா என்னும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் குற்றச்சம்பவத்துக்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வர பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்றிருந்த இரகசிய தகவலுக்கமைய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து சந்தேகநபரை கைது செய்திருந்தனர்.
வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர்கள் மேற்படி போதைப்பொருளை கடல் மார்க்கமாக நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரான உனகுருவே சாந்த என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
அதேவேளை கடந்த 22 ஆம் திகதி சீனிமோதர பகுதியில் இருந்த வீடொன்றிலிருந்து உயிரிழந்த நிலையில் இருவரது சடலங்களும்,. சுற்றிவளைப்புகளின் போது ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும், ரிவோல்வர் ரக 5 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

