உலக சிறுவர்கள் தின தேசிய விழா – 2025

56 0

இந்த ஆண்டு உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சு ஒரு வார கால தேசிய சிறுவர்கள் தின வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளது.

அதன் நிறைவு விழா மற்றும் உலக சிறுவர்கள் தின தேசிய கொண்டாட்ட நிகழ்வு இன்று புதன்கிழமை (ஒக்டோபர் 01) அலரி மாளிகையில் நடைபெற்றது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன.

இதன்போது, உலக சிறுவர்கள் தின நினைவு முத்திரை மற்றும் தபால்தலை வெளியிடப்பட்டது. உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இலக்கியப் போட்டிகளின் தொகுப்பாகிய “க்ஷேம பூமி” (Kshema Bhoomi) இலக்கியத் தொகுப்பு வெளியீட்டு வைக்கப்பட்டது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “சிந்துவெளி சித்தம்” (Sithuvili Siththam) ஓவியப் போட்டியின் வெற்றியாளர்கள் இன்றைய நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் கலந்துகொண்ட சிறுவர்களுக்காகப் பல்வேறு செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட விசேட நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

சிறுவர்கள் கலந்துகெண்ட  இந்த முக்கிய நிகழ்வில், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்,  பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன,  பாராளுமன்ற மகளிர் மன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள், பல நாடுகளின் தூதுவர்கள் உள்ளிட்ட இராஜதந்திரப் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.