‘உறுமய’ வேலைத்திட்டத்தின் கீழ் நிரந்தர காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்து சுமார் 100 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.
மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பக்கமுனைவைச் சேர்ந்த 43 வயது பெண் ஒருவர் கடந்த 26ஆம் திகதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்டபோது, அவர் கிரிபத்கொடவில் உள்ள ஒரு தற்காலிக விடுதியில் வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவத்தில் தொடர்புடைய 55 வயதுடைய மற்றொரு சந்தேக நபர் மஹரகமவைச் சேர்ந்தவர். அவர் 29ஆம் திகதி கைது செய்யப்பட்டு, கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
‘உறுமய’ திட்டத்தின் கீழ் கல்முனைப் பகுதியில் உள்ள 164 தொழிலதிபர்களுக்கு பதிவு செய்யப்படாத நிலங்களுக்கு நிரந்தர காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதாக உறுதியளித்து, சந்தேக நபரான பெண் ஒவ்வொருவரிடமிருந்தும் 600,000 ரூபாய் பெற்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கல்முனை பகுதியைச் சேர்ந்த 50 தொழிலதிபர்கள் சிறிகொத்த கட்சித் தலைமையகம் மற்றும் கொழும்பு பகுதியில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலுக்கு வரவழைக்கப்பட்டு, அரசியல் பிரச்சினைகள் குறித்துப் பேசி, பத்திரங்களை வழங்குவதாக உறுதியளித்து மோசடியாகப் பணம் பெற்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் உள்ள மோசடியாகப் பெறப்பட்ட பணத்தில் 2 மில்லியன் ரூபாயை முடக்க நீதிமன்ற உத்தரவுகளைப் பெற விசாரணை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

