மேல்மாகாணத்தில் பொதுபோக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது நாளை புதன்கிழமை (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பயணசீட்டை விநியோகிக்காத பேருந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் பயணச்சீட்டை பெற்றுக்கொள்ளாத பயணிகளுக்கு தண்டப்பணம் அறவிடப்படும் என்று மேல்மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.
அத்துடன் மேல்மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் அனைத்தும் பதிவு செய்வது நாளை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேல்மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் முகாமையாளர் (போக்குவரத்து) ஜீவந்த கீர்த்திரத்ன குறிப்பிடுகையில்,
மேல்மாகாணத்தில் பொதுபயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளின் சேவைகள் வினைத்திறகாக்கப்பட வேண்டும்.இதற்கமைய பொதுபயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்காத சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு 750 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்படும்.
அத்துடன் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளாத பயணிகளுக்கு 100 ரூபாய் தண்டப்பணத்துடன் பயணக்கட்டணத்தின் தொகை இரு மடங்காக அறவிடப்படும்.இந்த தண்டப்பணமும் வெகுவிரைவில் திருத்தப்படும்.
மேல்மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் அனைத்தும் பதிவு செய்வது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதற்காக மேல்மாகாணத்தில் 07 பிரதேச காரியாலயங்களில் முச்சக்கர வண்டி சாரதிகள் தமது விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றார்.

