35 வருடங்கள் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மட்டு . இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயம் விடுவிப்பு

57 0

1990 ஆம் ஆண்டு முதல்  மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில முகாமிட்டிருந்த இராணுவ முகாமானது 35 வருடங்களின் பின்னர் செவ்வாய்க்கிழமை (30) அகற்றப்பட்டு மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தியோக பூர்வ நிகழ்வு செவ்வாய்க்கிழமை (30) முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலய இராணுவ முகாமில் நடைபெற்றது.

இராணுவத்தினரினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில்ஹந்துனித்தி கலந்து கொண்டார்.

இதன்போது இராமகிருஷ்ணமிஷன் வித்தியாலய வளாகமானது  அமைச்சர் சுனில்ஹந்துனித்தியினால் அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் முன்னிலையில் கிரான் பிரதேச செயலாளர் கே.சித்திரவேலிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

இதன்போது கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜனக்க பல்லேகும்ர கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.ஆர்.ஹசந்தி மற்றும் கல்குடா வலய கல்விப்பணிப்பாளர் ரி.அனந்தரூபன் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.இப்பாடசாலையில் காணப்படும் பல்வேறு குறைபாடுகள் நிவர்த்தி செய்ததன் பின்னர் கல்வி அமைச்சின் அறிவுறுத்தலின்படி அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர் பாடசாலை மீண்டும் இயங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என குறித்த பாடசாலையின் அதிபர் கருத்து தெரிவித்தார்.

1990 ஆம் அண்டு காலப் பகுதியில் இப்பாடசலை கட்டடத்தில் இராணுவ முகாம் நிலைகொண்டிருந்தமையை தொடர்ந்து அப்பாடசாலையானது வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டு இயங்கி கொண்டிருந்தது.இதனால் மாணவர்கள் தங்களது கல்வியை பின் தொடர்வதற்கு போதிய இட வசதியோ விளையாட்டு மைதானமோ இன்றி பெரும் சிரமப்பட்டு வந்தனர்.

வடக்-கிழக்கு மாகாணங்களில் இராணுவ முகாம்களின் எண்ணிக்கையை மடடு:ப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் எடுத்த அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் இந்த பாடசாலை கட்டத்தில் நிலை கொண்டிருந்த இராணுவ முகாம் அகற்றப்ப்ட்டதாக கூறப்படுகிறது.இவ் முகாமை அகற்றி பாடசாலை கட்டடத்தை மீள ஒப்படைக்குமாறு கடந்த காலத்தில் பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் குரல் எழப்பி வந்தனர்.இ;ன்றைய நிகழ்வில் கையளிப்பு தொடர்பாக கலந்து கொண்ட அமைச்சர்  கருத்து தெரிவிக்கையில் இன்று முதற் கட்டமாக இவ் இராணுவ முகாம் அகற்றப்பட்டுள்ளது என்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலை கொண்டுள்ள மேலும் ஒரு சில இராணுவ முகாம்கள் கட்டம் கட்டமாக அகற்றப்படும் என கருத்து தெரிவித்தார்.