கொழும்பு மட்டக்குளி பகுதியில் வெவ்வேறு வகையான போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் இரகசிய தகவலுக்கமைய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து திங்கட்கிழமை (29) பிற்பகல் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்திருந்தனர். 38 வயதுடைய மட்டக்குளி சமித்புர பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து ஹேஸ் போதைப்பொருள் 33 கிலோ 270 கிராம், ஹெரோயின் கிராம் 408, போதை மாத்திரைகள் 200 மற்றும் விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட 7400 ஹெரோயின் துண்டுகளும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவரும் போதைப்பொருள் வர்த்தகருமான நபர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்தவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இதேவேளை கைதான சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

