அதிக விலைக்கு அரிசி விற்பனை – 105 வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு

80 0

கடந்த இரண்டு வாரங்களில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 105 வர்த்தக நிலையங்களில் சோதனை நடத்தப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இவ்வாறு அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தக நிலையங்கள் மீது வழக்குத் தொடரவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

தனியான வர்த்தகர் அதிக விலைக்கு அரிசி விற்று, அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 100,000 ரூபாய் முதல் 500,000 ரூபாய் வரை அபராதம் அல்லது 5 மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று அதிகாரசபை தெரிவித்துள்ளது.

ஒரு தனியார் நிறுவனம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் 500,000 ரூபாய் முதல் 5,000,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம், அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது மேற்கூறிய இரண்டும் விதிக்கப்படலாம்.

அத்துடன் அதிக விலைக்கு விற்பனை செய்த பொருட்களை அதிகாரசபையின் சட்டத்தின் கீழ் அரசுடமையாக்கவும் நீதிமன்றத்தால் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நுகர்வோர் விவகார அதிகாரசபை இந்த ஆண்டு இதுவரை 3,000 க்கும் மேற்பட்ட அரிசி தொடர்பான சோதனைகளை நடத்தியுள்ளது.

அந்த சோதனைகளில் 1,000 க்கும் மேற்பட்டவை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் தெரிவித்துள்ளார்.