போதைப்பொருள் கடத்தல்காரர்களைப் பிடிப்பது போலவே, 323 கொள்கலன்களுடன் தொடர்புடையவர்களும் இனங்காணப்பட்டு கைது செய்யப்பட வேண்டும். முழு நாடும் இந்தக் கேள்விக்கான பதிலுக்காகவே காத்திருக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மொரட்டுமுல்ல இதிபெத்த பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன் போது மேலும் உரையாற்றிய அவர்,பொய்யான, மக்களை ஏமாற்றும் அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பொய்கள் மற்றும் குழப்பங்களால் மக்களை ஏமாற்றி, அதன் மூலம் உயிர் பெறுகின்றனர். 24 மணித்தியாலங்களும் தொடர்ச்சியாக பொய், ஏமாற்றுதல் மற்றும் குழப்பத்தை மட்டுமே அராங்கம் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. தற்போது, போதைப்பொருட்கள் பெருந்தொகையான கைப்பற்றப்படுவது குறித்து பாரிய பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
போதைப்பொருள் கடத்தல் காரணமாக சமூகமும் நாடும் சீரழிந்து வருகிறது. எனவே அவற்றை கண்டு பிடித்து அழிப்பது சிறந்த செயலாகும். எவ்வாறிருப்பினும் இவ்வாறு போதைப்பொருட்களை மீட்பதைப் போலவே 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விதம் மற்றும் அதில் இருந்த பொருட்களை விடுவிக்க அனுமதி அளித்தவர்கள் யார் என்பதையும் அரசாங்கம் கண்டறிந்து அது குறித்த தகவல்களை வெளியிட வேண்டும்.
இந்தக் கொள்கலன்களில் போதைப்பொருட்கள், ஹெரோயின், அங்கீகரிக்கப்படாத பொருட்கள், சட்டவிரோதப் பொருட்கள் இருந்தனவா என்பதை வெளிப்படுத்த வேண்டும். போதைப்பொருள் கடத்தல்காரர்களைப் பிடிப்பது போலவே, 323 கொள்கலன்களுடன் தொடர்புடையவர்களும் இனங்காணப்பட்டு கைது செய்யப்பட வேண்டும். முழு நாடும் இந்தக் கேள்விக்கான பதிலுக்காகவே காத்திருக்கிறது.
ஒரு வருடமாக பொய் கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கத்துக்கு மக்கள் தீர்ப்பளிக்கும் நேரம் வந்துவிட்டது. மாகாணசபைத் தேர்தலில் பொய், மோசடி, குழப்பம், ஏமாற்றுதல் ஆகியவற்றைத் தோற்கடிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

