இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அரசாங்கத்தின் அடக்குமுறையை செயற்படுத்துகிறது – நளின் பண்டார

42 0

மக்கள் விடுதலை முன்னணியின் சட்ட பிரிவின் உறுப்பினர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முழுமையாக அரசியல்மயப்படுத்தப்பட்டு, அரசாங்கத்தின் அடக்குமுறையை செயற்படுத்துகிறது என  ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற  கோப் குழு அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கோப் குழு கடந்த காலத்தை போன்று நிகழ்கால நடவடிக்கைகள் மற்றும் முறைகேடுகளையும் ஆராய வேண்டும். பிள்ளையானின் உதவியாளர் பாசிக்குடா பகுதியில் 250 ஏக்கர் அரசகாணியை முறையற்ற வகையில் பெற்றுக்கொண்டுள்ளார். இந்த  காணியை மீளப்பெறுமா று காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

துறைமுக அதிகார சபையின் செயற்பாடுகள் பிரச்சினைக்குரியதாக உள்ளது.  சுங்கத்தில் இருந்து அண்மையில் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் நாட்களில் சுங்கம் மற்றும் துறைமுக அதிகார சபை கோப் குழுவுக்கு அழைக்கப்படுமா,

தென் மாகாணத்தில் மித்தெனிய பகுதியில் அண்மையில் கைப்பற்றப்பட்ட  போதைப்பொருளுடனான சிவப்பு நிறத்திலான இரண்டு கொள்கலன்கள் தொடர்பில் சர்வதேச புலனாய்வு பிரிவு முன்கூட்டியதாகவே எச்சரிக்கை விடுத்துள்ளது.இருப்பினும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களும் இவ்வாறே இடம்பெற்றன.

நாட்டில் பொலிஸ் இராச்சியமே காணப்படுகிறது. பொலிஸார் சட்டத்தை தமது கையில் எடுத்து செயற்படுகிறது. கம்யூனிஸ்ட்  ஆட்சி முறைமையை இலங்கையில் உருவாக்க முடியாது. ஜனநாயகத்தின் மீது கை வைத்தால் நேபாளத்துக்கு நேர்ந்த கதியே இலங்கைக்கும் நேரிடும்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் தலைவர் பற்றி மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் உறுப்பினர் நந்தன குணதிலக புதிய விடயத்தை தற்போது குறிப்பிட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் சட்ட பிரிவில் உறுப்பினராக இருந்தவரே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்  என்று குறிப்பிட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய ஆணைக்குழு சுயாதீனமாகவா செயற்படுகிறது. நந்தல குணதிலகவின்  கருத்து தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன.அரசாங்கத்தின் அடக்குமுறைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய ஆணைக்குழு செயற்படுத்துகிறது. எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் ஆணைக்குழுவால் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்கள். ஆணைக்குழு இன்று அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது.

ஒரு நாடு ஒரு கட்சி கொள்கையை அமுல்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. வாகன தகடு தொடர்பில்  போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டார்.இந்த திட்டத்தின் விலைமனுகோரல் வழங்கப்பட்டுள்ளது. சீனாவை மகிழ்விக்க சென்றால் இந்தியாவை பகைத்துக்கொள்ள நேரிடும். குறுக்கு வழியில் செயற்பட்டால் ஒருபோதும் முன்னேற முடியாது என்றார்.