உள்நாட்டு விமான பயணங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல நடவடிக்கைகள் தேவை

50 0

விமான சேவையின் பாதுகாப்பு தன்மையில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் எமது நாடு உயர்ந்த நிலையில் காணப்படுகிறது. என்றாலும் உள்நாட்டு விமான பயணங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை  பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஒரு நாடாக, நமது விமானப் பயணப் போக்குவரத்துப் பாதுகாப்புகள் உயர் மட்டத்தில் காணப்படுவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். விமானப் பாதுகாப்பு மதிப்பெண்ணில் எமது நாட்டிற்கான மதிப்பெண் 92வீதமாக அமைந்து காணப்படுகிறது., இது நமது நாட்டில் விமானப் பயணப் போக்குவரத்து பாதுகாப்பைப் பொறுத்தவரை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இது உயர்மட்ட மதிப்பெண்ணாக அமைந்து காணப்படுகிறது.

இருப்பினும், ஒரு நாடாக, விமானப் போக்குவரத்து பாதுகாப்பை மேலும் மேம்படுத்த நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பாக, உள்நாட்டு விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு தொடர்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் 2022ஆம் ஆண்டு ஹெகொப்டர் விபத்து ஒன்று  இடம்பெற்றது. அதேபோன்று 2020,2021,2023 காலப்பகுதியிலும்  உள்நாட்டு விமான பயணத்தின்போது விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

அதனால் உள்நாட்டு விமான பயணப்பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக அவசர நிலைமைகளின்போது செயற்படக்கூடிய திடீர் விபத்து சேவை பிரிவுகளை பிரதேச செயலக மட்டத்தில் அமைக்கவேண்டும். அதேபாேன்று  தேடிப்பார்த்தல் மற்றும் மீட்பு சேவை துறைகளை கிராம  மட்டத்தில்  ஆரம்பித்தல் போன்ற வேலைத்திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கிறேன் என்றார்.