மெல்சிரிபுற பகுதியில் நா உயன, ஆரண்ய சேனாசன கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த பௌத்த பிக்குகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக புத்தசாசன, சமய, கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும செனவி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மெல்சிரிபுற பகுதியில் நா உயன, ஆரண்ய சேனாசன கேபிள் கார் விபத்தில் 7 பௌத்த பிக்குகள் உயிரிழந்துள்ளதுடன் அவர்களில் நான்கு பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் ஏனைய மூவரும் வெளிநாட்டவர்கள்.
உயிரிழந்த வெளிநாட்டு பௌத்த பிக்குகள் ருமேனியா, ரஷ்யா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.அவர்களுக்கு அரசாங்கம் மற்றும் பாராளுமன்றத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இது தொடர்பான தகவல்கள் கிடைத்த அந்தக் கணம் முதல் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டன. சமய கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் நேரடியாக ஸ்தலத்திற்க்கு சென்றிருந்தார்.
வடமத்திய மாகாண ஆளுநர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களது மேலான கவனத்தை செலுத்தியுள்ளனர். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஒத்துழைப்பு எமக்கு தேவைப்படுகின்றது. பிரதி யமைச்சர் அருண் ஹேமச்சந்திராவுடன் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.
உயிரிழந்துள்ள வெளிநாட்டு பௌத்த பிக்குகளின் இறுதிக் கிரியைகளை இலங்கையில் நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
குருநாகல், மெல்சிறிபுர நா உயன, ஆரண்ய சேனாசனவில் மடங்களுக்கு இடையே பயணித்த கேபிள் கார் உடைந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பிக்குகள் உயிரிழந்துள்ளதுடன் 6 பௌத்த பிக்குகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பிக்குகள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என்றார்.

