பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நீதிக்காக முறைமைகள் மறுசீரமைப்பு தேவை

85 0

சிறுவர் பாதுகாப்பு என்பது நீதித்துறையுடன் சம்பந்தப்படும் ஒரு விடயமாகும். சிறுவர்களின் நலன்களில் கவனம் செலுத்தும் விதத்திலும் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு சிறுவர் நேய நீதியை உறுதிப்படுத்தும் விதத்திலும் முறைமைகளை மறுசீரமைப்பது எமது கடமையாகும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெறுகின்ற சிறுவர்களுக்கெதிரான அனைத்து வகையான  வன்முறைகளையும் எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான அழுத்தங்களை வழங்கும் நோக்கில் சர்வதேச சிறுவர் பாதுகாப்பு மாநாடு கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகி இன்று வரையில் நடைபெறுகின்றது.

அனைத்து சிறுவர்களுக்கும் உறுதியான மற்றும் நிலைத்திருக்கும் பாதுகாப்பு முறைமைகளை திட்டமிட்டு உருவாக்குவதற்காக இந்த மாநாட்டில் முன்னணி அரச நிறுவனங்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு துறைசார் நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பிற்கு பொறுப்பான அதிகாரிகள் உள்ளடங்கலாக கிட்டத்தட்ட 250 பேர் பங்கேற்கின்றனர்.

களனிய பல்கலைக்கழகத்தின் பால்நிலை கற்கைகள் மத்திய நிலையமானது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கூட்டொத்துழைப்புடன் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டிற்கு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தினூடாக அதன் ஒத்துழைப்புக்களை வழங்கிக்கொண்டிருக்கின்றது.

கடும் அழுத்தங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சிறுவர்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு துரித தீர்வுகளை காண வேண்டிய கட்டாயத்தில் நாடு இருப்பதால், குறித்த விடயம் தொடர்பாக கொள்கை உருவாக்கத்தை நோக்கி வழிப்படுத்துவதும் , கல்வி ரீதியான ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதும் நிறுவன ரீதியான நடவடிக்கைகளை திட்டமிடுவதும் இந்த மாநாட்டின் பிரதான இலக்குகளாகும்.

இம்மாநாட்டில் சபாநாயகர் வைத்தியர். ஜகத் விக்ரமரத்ன உரையாற்றுகையில், இது வெறுமனே ஒரு மாநாடல்ல, மாறாக, எமது சிறுவர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்த தேசிய உரையாடலுக்கான பங்களிப்பாகும். இது வெறுமனே ஒரு பிரதிபலிப்பு மட்டுமல்ல. மாறாக செயற்படுவதற்கான ஒரு தளம்” என இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி பிரீதி இனோகா அமரசிங்ஹ உரையாற்றுகையில்,

ஏற்கனவே பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி வழங்குவது எந்தளவு முக்கியமோ, சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகாது அவர்களை பாதுகாப்பதும் அந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது. சிறுவர்களைப் பாதுகாக்கும் முயற்சிகளை பலப்படுத்துவதற்குசமூக வலையமைப்பும் சமூக அங்கத்தவர்களின் ஈடுபாடும் இன்றியமையாதது என்றும், அனைவரும் ஒன்றிணைந்து போதிய விழிப்புணர்வுடன் செயற்பட்டால் மாத்திரமே சிறுவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்க முடியும் என்றார்.