உங்கள் வீடு தேடிவரும் ரெடிமேட் திருமண மண்டபம்

384 0

கொரோனா ஊரடங்கு காலத்தில் திருமணம் நடத்துவதற்கென சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட திருமண மண்டபம் தங்கள் வீட்டுக்கே தேடி வந்து கொண்டிருக்கிறது.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலால் அனைத்துத் தொழிற்சாலைகள், கடைகள், கோவில்கள் மூடப்பட்டுள்ளன. அத்துடன் அனைத்து நிகழ்ச்சிகள், திருமணம், பிறந்தநாள், காது குத்து, மஞ்சள் நீராட்டு, கோவில்களில் முக்கிய விழாக்கள் ஆகிய அனைத்தும் தடைபட்டுள்ளது. கொரோனோ ஊரடங்கு காலத்தில் திருமண மண்டபங்கள், கோவில்கள் மூடப்பட்டுள்ள நிலையில் தோரணங்கள் இருக்கைகள் கூட இல்லாமல் இல்லங்களில் மிக எளிமையான முறையில் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்பதால் மொய்ப்பண வசூல் செய்ய முடியாமல் திருமண வீட்டாருக்கு இழப்பும் ஏற்பட்டது.

ஊரடங்கால் திருமண விழாக்களுக்கு செல்ல முடியாததால் மணமக்களை வாழ்த்த முடியவில்லை. இந்த நிலையில் சுபகாரியங்களுக்கு அலங்கார மேடைகள் அமைத்துத் தரும் தொழில் செய்து வருபவர் திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் ஹக்கீம் என்பவர்க்கு ஒரு சிந்தனை தோன்றியது.

பெரியோர்களின் ஆசிர்வாதம் இல்லாமலும், இருமனங்கள் இணையும் திருமண நிகழ்வுகள் ஏனோதானோவென நடப்பதாலும் மணமக்களும்  பெற்றோர்களும் வேதனையில் இருந்துவந்ததை அறிந்த ஹக்கீம்,  இது குறித்து தன்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் மனதை கவரும் வகையில் கனரக வாகனத்தில் மணவறை போன்ற தோற்றத்தை வடிவமைத்துள்ளார்.
மேலும் மணமக்கள் இல்லத்தருகே மண்டபம் போல் செட் அமைத்து கொடுத்தும், வரவேற்பு அறையில் உடல்வெப்பம் அளக்கும் பரிசோதனைச் கருவிகள், சானிடைசர், மாஸ்க் போன்றவை அளித்தும் ஒரு பெரிய மண்டபத்தில் நடத்தப்பட்ட சுபகாரியம் போல் நடத்திட ஒரு சிலருக்கு ஏற்பாடு செய்துக் கொடுத்துள்ளார்.
இந்த ஊரடங்கு காலத்தில் இது பொது மக்களிடையே நல்ல வரவேற்பைக் பெற்றது.  இப்படி ஏற்பாடு செய்யப்படும் திருமணம் ஒரு பெரிய மண்டபத்தில் திருமணம்  நடத்தியது போன்ற சூழ்நிலையை ஏற்படுத்தி தருவதாகவும்,  மிகுந்த மன மகிழ்ச்சியை அளிப்பதாகவும் திருமணத்தை நடத்துபவர்களும், பொதுமக்களும் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
கொரோனோ ஊரடங்கு காலத்தில் சுப விஷேச நிகழ்ச்சிகளை ஆடம்பரமாய் நடத்த முடியாமல் இருந்த நிலையில், உடுமலை அலங்காரக் கலைஞர் ஹக்கீமின் இந்தப் வித்தியாசமான அனுபவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுவருகிறது என்பது மகிழ்ச்சியான செய்தி.