ஒவ்வொரு பயணமும் முடிந்தபின்பும் கிருமிநாசினியால் ஆட்டோக்களை சுத்தம் செய்யுங்கள்: ஓட்டுநர்களுக்கு அமைச்சர் உதயகுமார் வேண்டுகோள்

236 0

கரோனா நோய் தொற்று தடுக்கும் வகையில், ஒவ்வொரு பயணமும் முடிந்தபிறகும், தங்களது ஆட்டோக்களை கிருமிநாசினியால் சுத்தம் செய்யவேண்டும் என, ஓட்டுநர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்தார்.

மதுரை உலகத் தமிழ்ச்சங்க கட்டிடத்தில் 300க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அமைச்சர் நிவாரணப் பொருட்களை வழங்கி பேசியதாவது:

கரோனா வைரஸ் தடுப்புக்கென பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் 60 நாளுக்கு மேலாக வாழ்வாதாரம் மற்றும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளோம்.

220 நாடுகளிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்கிறார்.

நிவாரண நடவடிக்கையிலும், அரசு அறிவித்த தளர்வு களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், தொற்று ஏற்பட்டோருக்கு உயர்தர சிகிச்சை அளிப்பதிலும் அனைத்து துறையினரும் ஒருங் கிணைந்து செயல்படுகின்றனர்.

ஆட்டோ ஓட்டுநர்களும் உன்னதமான பணியை செய்கின்றனர். அவர்களின் சிரம்மத்தைக் கருத்தில் கொண்டு சில தளர்வுகளை முதல்வர் அறிவித்துள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர்கள் முகக்கவசம் அணியவேண்டும். கிருமி நாசினியால் சுத்தம் செய்தல், சமூக இடைவெளியுடன் பயணிகளை முகக்கவசம் அணிய வலியுறுத்த வேண்டும். ஒவ்வொரு பயணமும் முடிந்தபின், பிளீச்சிங் பவுடர் கலந்த தண்ணீரால் ஆட்டோவை சுத்தப்படுத்தவேண்டும். குடும்பத்தினருடன் சமூக விலகலை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார். ஆட்சியர் டிஜி. வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.