அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த காலஅவகாசம் நீட்டிப்பு

2713 0

அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் புதிய சலுகைகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஏழைகள் மற்றும் நடுத்தர வகுப்பினர் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறுகச் சிறுக சேமித்த பணத்தைக் கொண்டு வருங்காலத்தில் சொந்தமாக வீடு கட்டி அதில் நிம்மதியாக வாழ்வோம் என்ற கனவுடன் விலை குறைவான வீட்டு மனைகளை வாங்கியுள்ளனர். விலை குறைவாக இருக்கின்ற ஒரே காரணத்தினால், அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகளில் உள்ள மனைகளை வாங்கியுள்ளனர்.

இப்படிப்பட்ட மனைப்பிரிவுகளில் சாலை வசதி, தெரு விளக்குகள், கழிவு நீர் கால்வாய், குடிநீர் வசதி போன்ற அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே இம்மனைகளை வாங்கியுள்ள விவரம் அறியாத பொதுமக்களின் இன்னல்களைப் போக்கும் வகையில் இம்மனைப் பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்த ஒரு புதிய திட்டம் வகுக்கப்பட்டு கடந்த 4.5.2017 அன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையால் அறிவிக்கப்பட்டது.

மேற்கண்ட திட்டத்தைச் செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் தெரிய வந்தது. மேலும் இத்திட்டத்தின் மூலம் குறைவான அளவிலேயே மனைப்பிரிவுகளையும், மனைகளையும் வரன்முறைப்படுத்த விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இக்கோரிக்கை மனுக்களையும், கருத்துகளையும் அரசு கவனமாகப் பரிசீலித்தும், கடந்த 11-ந்தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டு, இத்திட்டத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:-

* இந்த திட்டத்தின் காலம் 6 மாதத்தில் இருந்து ஒரு வருடமாக 3.5.2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

* விற்கப்பட்ட மனைகளின் அடிப்படையில் மனைப்பிரிவுகளை 3 வகைகளாகப் பிரித்து வரன்முறைபடுத்தும் முறை நீக்கப்பட்டுள்ளது. இதனால் அனுமதியின்றி பிரிக்கப்பட்ட மனைப்பிரிவுகள் உள்ளது உள்ளபடியே வரன்முறை செய்யப்படும். ஒரு மனைப் பிரிவில் குறைந்தப்பட்சம் ஒரு மனை விற்கப் பட்டிருந்தால் அந்த மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தப்படும். மேலும், மனைப்பிரிவில் அமைந்துள்ள சாலைகள் ‘உள்ளது உள்ளபடி’ நிலையில் வரன்முறைப்படுத்தப்படும்.

* மனைப்பிரிவு மேம்பாட்டாளர்கள் தங்கள் மனைப்பிரிவில் வரன்முறைப்படுத்தக் கோரும் விற்கப்படாத மனைகளின் பரப்பளவில் 10 சதவீத நிலத்தை ஓ.எஸ்.ஆருக்காக ஒதுக்கி உள்ளாட்சிக்கு தானமாக வழங்க வேண்டும். ஓ.எஸ்.ஆர். எத்தகைய அளவில் இருப்பினும், விதிகளில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் தனி நபர்களால் வாங்கப்பட்ட மனையை வரன்முறைப்படுத்தும் போது ஓ.எஸ்.ஆர். விதிகளிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும்.

* சென்னைப் பெருநகரப் பகுதியில் 5.8.1975 முதல் 20.10.2016 வரையிலும், சென்னைப் பெருநகரப் பகுதிக்கு வெளியே அமைந்துள்ள ஊரகப் பகுதிகளில் 29.11.1972 முதல் 20.10.2016 வரையிலும், சென்னைப் பெருநகரப் பகுதிக்கு வெளியே நகரப் பகுதிகளில் 1.1.1980 முதல் 20.10.2016 வரையிலும் ஏற்படுத்தப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகள், மனை உட்பிரிவுகளில் அமைந்துள்ள மனைகளை வரன்முறைப்படுத்த இத்திட்டம் பொருந்தும்.

* மேற்கண்ட தேதிகளுக்கு முன்னர் வாங்கப்பட்ட அனைத்து அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகள் வரன்முறைப்படுத்தப்பட்டதாகக் கருதப்படும். இதற்கு வளர்ச்சிக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

ஏழை, எளிய மக்களின் நலனையே குறிக்கோளாகக் கொண்டு, ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, பொதுமக்கள் பெரிதும் பயனடையும் வகையில் மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தினை மேலும் எளிமைப்படுத்தியும், கட்டணங்களைக் குறைத்தும் ஆணையிட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment