வித்தியா படுகொலை வழக்கு ; லலித் ஜயசிங்க மீண்டும் விளக்கமறியலில்

3650 0
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக அறிவிக்கப்பட்ட சுவிஸ் குமாரைக் காப்பாற்ற முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க தொடர்பில் அனைத்து விசாரணைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் இன்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் ஆர். சபேசன் முன்னிலையில் சந்தேகநபரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேகநபர் தொடர்பான அனைத்து விசாரணைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக குறப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மன்றில் அறிவித்துள்ளனர்.ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஶ்ரீகஜன் இதுவரையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமை தொடர்பிலும் மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் தாம் முக்கியமானதொரு சாட்சியை வழங்கவுள்ளதாக பொலிஸாரினூடாக நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்த சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் இன்றைய தினமும் மன்றில் ஆஜராகவில்லை.
மன்றில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
குறித்த சாட்சியாளர் சுயவிருப்பின் அடிப்படையில் சாட்சி வழங்க முன்வந்துள்ளதால், அவருக்கு அழைப்பாணை விடுக்கத் தேவையில்லை என சட்டத்தரணி கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், இரத்தினபுரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அவருக்கான அறிவித்தலை அனுப்பி வைக்குமாறு பதில் நீதவான் ஆர்.சபேசன் நீதமன்றப் பதிவாளருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.
அத்தோடு, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, லலித் ஜயசிங்க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவும் நீதவானால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது

Leave a comment