‘நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாவிட்டால் ஜனாதிபதியிடம் முறையிடுவோம்’: மு.க.ஸ்டாலின்

334 0

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாவிட்டால் ஜனாதிபதியிடம் முறையிடுவோம் என்று தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- எதிர்வரும் தேர்தலில் உங்கள் தலைமையில் மெகா கூட்டணி அமையும் வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- அதுபற்றி தேர்தல் நேரத்தில் தெரியவரும்.

கேள்வி:- இந்த அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் இதுவரை உத்தரவிடாமல் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- ஏற்கனவே 19 சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை, எனவே முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் தனித்தனியாக கடிதம் கொடுத்து இருக்கிறார்கள். அதையொட்டி, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தி.மு.க. சார்பில், இந்த அரசு பெரும்பான்மை நடத்தக்கூடிய வகையில் உடனடியாக சட்டசபையை கூட்ட உத்தரவிட வேண்டுமென்று கவர்னருக்கு, நான் கடிதம் அனுப்பி இருக்கிறேன்.

அந்தக் கடிதம் அனுப்பப்பட்டு 3 அல்லது 4 நாட்கள் கடந்தும் உரிய விளக்கமோ, பதிலோ எங்களுக்கு வரவில்லை. எனவே, இன்னும் ஓரிரு நாட்கள் பொறுத்து இருந்து பார்த்துவிட்டு, அப்போதும் பதில் வரவில்லை என்று சொன்னால், ஜனாதிபதியிடம் இதுகுறித்து முறையிடும் சூழ்நிலை உருவாகும். தேவைப்பட்டால் நீதிமன்றத்தையும் நிச்சயம் நாடுவோம்.

கேள்வி:- டி.என்.பி.எஸ்.சி.யில் நடைபெற்ற முறைகேடுகளை வெளிப்படுத்திய தனியார் தொலைக்காட்சியைத் தடை செய்து, பலவிதமான நெருக்கடிகளை அரசு கொடுத்து வருகிறதே?

பதில்:- இந்த ஆட்சியில் இதுபோன்ற செயல்கள் சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. அதனால் தான் இந்த குதிரை பேர ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டுமென்று நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஊடகங்கள் இந்தச் செய்தியை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார்.

Leave a comment